Pages

Monday, 21 December 2020

பெண்மானம் காத்த நடுகல்

 பெண்மானம் காத்த நடுகல்:


கூத்தராற்றுப்படையில், வேள் நன்னனிடம் பரிசுபெற்ற ஒருகூத்தன், மற்றொரு கூத்தனுக்கு வழிகூறுகையில், வழியெங்கும் மாமரந்தோறும் நடுகல் இருக்கும், அதனை அடையாளம் கண்டு வா என கூறுவதாய் விளிக்கிறது. அப்பகுதிதான் இன்றைய செங்கம், சங்ககாலத்திலேயே இங்கு நடுகல் நிரம்பியிருந்ததை இதன் வழியாய் அறியலாம்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் உள்ளது ராஜராஜசோழன் காலத்திய நடுகல். ஏரிக்கரையில் நட்டுவைத்த நடுகல், காலப்போக்கில் மண்அரிப்பின் காரணமாய் எடைதாங்காமல் கீழே விழுந்தது. தற்பொழுது அப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் முயற்சிச்சால் மீண்டும் நிமிர்த்தி வைக்கப்பட்டு, இறந்த அவ்வீரனுக்கு மீண்டும் மரியாதை செய்யப்பட்டது.


நடுகல் அமைப்பு:


வீரனின் உருவம் இடதுபுறம் பார்த்தவாறு கையில் வாள், கேடயத்துடன் காட்டப்பட்டுள்ளார். வீரனின் தலைக்குமேல் இருசிறிய உருவங்கள் காட்டப்பட்டுள்ளது! இறந்த வீரன் மேலுலகம் செல்வதுபோல் இது காட்டப்பட்டுள்ளது, இறந்தவன் வீரன்எனில் அவன் மேலுலகம் செல்வான் என்பது பழமையான நம்பிக்கை.வீரனின் காலுக்கருகே குத்துவிளக்கும், கெண்டியும் வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்க்கு நீர் மற்றும் வைத்து விளக்கேற்றி வைக்கும் வழிபாடு இன்றும் தொடர்வதை நாம் இதனோடு ஒப்பீடு செய்யலாம். நடுகல்லின் கீழ்ப்பகுதி நன்றாய் செதுக்கப்பட்டு பூமிப்பகுதியில் நடும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.


நடுகல் விழா:


இப்பகுதி மக்கள் வேடியப்பனாய் வழிபடும் நடுகல்லிற்கு ஆடிப்பெருக்கன்று விழா எடுப்பதை வழக்கமாய் வைத்துள்ளனர். இப்பகுதி நடுகல் பூசாரிக்கு "உளர் பூசாரி" எனப்பெயர். சுருட்டு, மது, கத்தி போன்றவற்றை வேடியப்பனுக்கு படைப்பர். உடுக்கை அடித்து உளர்பூசாரி கீழ்க்கண்டவாறு பாடுவார்,


"காட்டை வளைச்சு வில்லாப் பூட்டி

கானாய் கோபவிடும் செந்தலை வேடுவா

கோ கோ குமரா கொலுவுக்கு அலங்காரா

நீதிவாகனா! நித்திய அவதாரா!

நாராயணா! நரசிம்ம அவதாரா!

அரிக்கும் சிவனுக்கும் உற்பத்தியாய் பிறந்த

அரிமால் புத்திரா! ஐயனாரப்பா!

வேட்டுவலைவா! வேடியப்பா 


என பாட்டுப்பாடி வணங்குர், அச்சமயம் மண்ணால் செய்த சிலையை வைத்து வணங்குவர், நேர்த்திக்கடனுக்காய் ஆடு, மாடுகளை வழங்குவர். அந்த ஆநிரைகளை பட்டியில் அடைக்காமல் சுதந்திரமாய் விட்டுவிடுவர்.


கல்வெட்டு சிறப்புகள்:


ராஜராஜனின் 14ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட இந்நடுகல், "சாலைய் கலமறுத்து அங்குள்ள மலைஆளர் தலையறுத்து" எனும் ஒரு வாக்கியம் அவரது மெய்கீர்த்தியில் இல்லாத தகவலை கூறுகிறது. எனவே இறந்துபோன இவ்வூரன் ராஜராஜனின் கன்னிப்போரான, காந்தளூர்சாலைபோரில் கலந்து கொண்டு "அங்குள்ள மலையாளர்" தலைகொய்த வீரர்களில் இவனும் இருந்திருக்கக்கூடும் என ஒரு கருத்தும் உள்ளது. ஆகவே உரிமையுடன் இவ்வூரார் மட்டும் ராஜராஜனின் மெய்கீர்த்தியில் இந்த "மலைஆளர் தலைஅறுத்து" எனும் வார்த்தையை சேர்த்திருக்கக்கூடும், இதேபோல் குமரிமாவட்ட மணவாளகுறிச்சி பகுதி ராஜராஜனின் மெய்கீர்த்தியில் "கோவில் பள்ளியகம் கொணர்ந்து" எனும் ஒரு வார்த்தை புதிதாக அங்குமட்டுமே கிடைப்பது, இந்த வாதத்திற்கு வலுசேர்க்கிறது. மேலும் இந்நடுகல்லில், 


"கவரை மாயிலெட்டி கம்பன் பெண்டுகள் கூரைகொள்ள எறிஞ்சி பட்டான்" 


மாயிலெட்டி என்பதற்கு அந்தப்புர பெண்களிற்கு வழங்கப்படும் உயரிய சொல் என அகராதிகள் கூறுகிறது. இந்நடுகல்லில் கவரை என்பதற்கு முன்னுள்ள சொற்கள் சிதைந்துள்ளதால் சரியாய் விளக்கம் கொள்ள இயலவில்லை, 

கூரைகொள்ள என்பதிலிருந்து, அந்தப்புர பெண்களின் வீடுகளிலுள்ள கூரைபிரித்து எவரோ தவறாய் நடக்க முயற்சிக்க அந்த கலகத்தில் இவ்வீரன் இறந்துள்ளான் என ஒருவாறு யூகிக்க முடிகிறது.




Wednesday, 28 October 2020

சிலப்பதிகாரம் கூறும் வீரன்

 சிலப்பதிகாரம் கூறும் வீரன்:

இஸ்லாமிய ஜிகாதிகள்,  ஜப்பானிய ஹிரகரகள், விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை இவற்களுக்கெல்லாம் முன்னோடி அக்காலத்தைய நவகண்ட, அரிகண்ட வீரர்கள்.

அடிப்படையில் இவர்கள் அனைவரும் ஒரே உளவியல் எண்ணங்களை கொண்டவர்களே! இப்பலியிடுதலை தொல்காப்பியம் 'அவிபலி' என்கிறது. சிந்துசமவெளியில் கிடைத்த முத்திரைகளில் கூட நரபலி குறித்த செய்திகள் கிடைக்கிறது


"வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென

நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு

உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து

மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி"


( இந்திர விழவூரெடுத்த காதை -சிலப்பதிகாரம் )


"அடிக்கழுத்துடன் சிரத்தை அரிவராலோ

அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ

கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ.."


(கலிங்கத்துப்பரணி)


மேற்கண்ட இருபாடல்களும் வீரன் தன்தலையை அரிந்து கொற்வையின் முன் உள்ள பீடத்தில் வைப்பான் என்கிறது.  எவ்வளவு மனஉறுதி பெற்றவனாய் இருப்பினும் வெட்டுண்ட தன்தலையை பீடத்தில் வைப்பது சாத்தியமா? இல்லையா?  என தெரியவில்லை. ஆனால் ஹம்பியில் உள்ள இந்த சிற்பத்தில் தன் இடக்கையில் தன்தலையை ஏந்தி நிற்கும் வீரன் சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி காட்டும் வீரனை நினைவுறுத்துகிறான்.



Sunday, 20 September 2020

தூங்குதலை நடுகல்

 தூங்குதலை நடுகல்:


கர்நாடகாவிலுள்ள தூங்குதலை வகை நடுகல், நம் ஊரில் கிடைத்த இவ்வகை நடுகற்கள் யாவும். தன்னைதானே பலியிட்டுக்கொள்ளும் சுயபலிகற்களாகவே கிடைத்துள்ளது. ஆனால் கர்நாடகா மற்றும் அதன் எல்லைபகுதியான, நுளம்பர், கங்கர்கள் ஆண்ட தமிழகத்தின் சில எல்லைப்பகுதிளில், தூங்குதலை பலிஏற்கும் நாயகனை, மற்றொரு ஆள் வெட்டுவது போல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கீழ்க்கண்ட சிற்பம் மூன்று அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. கீழடுக்கில் வீரன் போர்க்களத்தில் கலந்து கொள்வது போல் உள்ளது. அவ்வீரன் போரில் கலந்துகொள்ளும் வீரனாக அல்லது, அவனது படையணி கீழே காட்டப்பட்டுள்ளது!  போரில் தம் அணி வெற்றிபெற, இரண்டாவது அடுக்கில் தம் தலையை கொடுக்க தயாராய் காட்டப்பட்டுள்ளான். அவனது தலை ஒரு மூங்கிலில் கட்டப்பட்டு, பத்மாசனத்தில் அமர்ந்துள்ளின். மற்றொரு வீரன் கொடுவாளில் வெட்ட கையை ஓங்கி வருகிறான். மேலடுக்கில் சிவலோகபதவி அடைந்துள்ளவாறு காட்டப்பட்டுள்ளான். லிங்கத்தின்மேல் சந்திரனும், சூரியனும் காட்டப்பட்டு, இவ்வீரனது இந்த உயிர்க்கொடை சந்திர, சூரியன் இருக்கும்வரை நிலைக்க இக்கல் நடப்பட்டதாய் காட்டப்பட்டுள்ளது!



Wednesday, 9 September 2020

குடியரசு சுவாமி

 குடியரசு சுவாமி:


கரூர் மாவட்டம் பசுபதிபாளையம், அமராவதி ஆற்றங்கரை இறக்கத்தில் குடியரசு சுவாமி என்பவர் வணங்கப்பட்டு வருகிறார். தனியே ஒரு மாடம் சுற்றுச்சுவர் அமைத்து எளிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.அவரின் எதிரே வேல், சூலம் போன்றவை உன்றிவைக்கப்பட்டுள்ளது,  மக்கள் இந்த சூலத்தில் நேர்த்திக்கடன் வேண்டி உயிரோடு கோழியையும், முட்டை, எலுமிச்சைபழம் போன்றவற்றை குத்திவிட்டு செல்கின்றனர். பலியினங்களின் இரத்தம் தரையெங்கும் காணப்படுகிறது! வயதான பூசாரி ஒருவர் மாடத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து, குடியரசு சுவாமிகளிடம் மக்களின் குறைகளை நேரடியாய் நண்பனிடம் பேசுவதுபோல் பரிட்சையமாய் பேசுகிறார்.

இவர்களின் நம்பிக்கையை கொஞ்சம் விலக்கிவிட்டு பார்த்தால், இறந்துபோன வீரர் ஒருவருக்கு எழுப்பப்பட்ட நடுகல் என்பது பார்த்தால் தெளிவாய் தெரிகிறது. 

இவர்களின் இத்தகைய நம்பிக்கையாலேதான் இன்றும் இச்சிலைகள் போற்றி பாதுகாக்கப்படுகிறது. சில இடங்களில் நடுகற்கள் இறையுருவமாய் மாற்றி வணங்கப்படுகிறது!  புலிகுத்தி வீரனை ராமனாகவும், புலியை சிறிது மாற்றி அனுமார் ராமரை கட்டியணைப்பது போலவும் வணங்கப்படுகிறது. அதுவும் வில்லினை கையில் ஏந்திய வீரன் எனில், அவருக்கு நாமமிட்டு பெருமாளாக்கி வழிபாடு நடக்கிறது.


இங்கு நாம் காணும் "குடியரசு சாமிகள்" இத்தகைய பெரிய மாற்றம் காணாமல் சாமியாக்கி விட்டனர் இறந்த அவ்வீரனை. இந்நடுகல்லில் கல்வெட்டு ஏதும் இல்லை, இருப்பினும் தோற்றத்தை வைத்து இவரை 11-12 ம் நூற்றாண்டு கால வீரனாய் கருதமுடிகிறது! நான்கு அடி உயரத்தில் இச்சிற்பம் உள்ளது. கல் ஒழுங்கற்ற முறையில் உள்ளது. பெரும்பாலும் நடுகல் ஒழுங்கான வடிவில் அமைப்பதில்லை, மூலையில் சிறிது உடைத்தவாறே வடிக்கப்படுகிறது. இறந்தவருக்கு எழுப்பப்படுவதாலேயே இவ்வாறு ஏற்படுத்துகின்றனர் என கருதலாம். இடதுகையில் வில்லையும், வலதுகையில் வாளையும், இடையில் குறுவாளையும் காட்டியுள்ளனர். இவ்வீரர் பல ஆயுதங்களை கையாள தெரிந்தவர் எனகாட்ட இவ்வாறு காட்டியுள்ளனர். முன்னோக்கி செல்லும் வலதுகாலில் அம்பு தைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடந்த உள்ளூர் பூசலில் பெரிதாக ஏதோ சாதித்துவிட்டு இவர் இறந்துள்ளார்!முன்னோக்கி சென்ற அவரை பின்னிருந்து அம்பெய்து கொன்றிருப்பதை சிற்பி அழகுற காட்சிப்படுத்தியுள்ளார். 

இறையுருவமாய் இருந்திருந்தால், முத்திரை, ஜடாபாரம், அணிகலன்கள், முப்புரிநூல், ஆசனம் போன்ற ஆகமங்களால் காட்டப்பட்டிருக்கும். இறந்தது வெறும் வீரன் ஆதலால் தமக்கு தெரிந்த முறையில் வீரனை பிரம்மாண்டமாய்காட்சிபடுத்தியுள்ளார் பெயர்தெரியாத அந்த சிற்பி.






Monday, 7 September 2020

வஞ்சிவேள் நடுகல்

 வஞ்சிவேள் நடுகல்:

சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரை கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகிறது. கருவூர் என்றும் வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு நிறைய சான்றுள்ளது. கருவூரும்-வஞ்சியும் ஒன்றே என்பதனை சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு போன்ற சங்கஇலக்கிய பாடல்கள் வாயிவாய் அறியலாம்.

"தன்பொருநை புனல்பாயும்

விண் பொரு புகழ் விறல்வஞ்சி"

இன்று அமராவதி என அழைக்கப்படும் தன்பொருநை ஆற்றங்கரையிலுள்ள வஞ்சியை தலைநகராய் கொண்டு "பெருங்கடுங்கோ" எனும் சேரன் ஆண்டதை புறநானூற்று பாடல் ஒன்று கூறுகிறது. கல்வெட்டுரீதியாய் கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள வேலாயுதம்பாளையம் ஆறுநாட்டார்மலையில் உள்ள கி.பி.இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழி கல்வெட்டு "கருஊர்" என பயின்று வருகிறது. "வஞ்சி" என்னும் பெயருக்கு சான்றாய் கி.பி.8 ம் நூற்றாண்டைச் சேர்ந்தகீழ்க்கண்ட இரு நடுகற்களில் ஒன்றில் "வஞ்சிவேள்" என சான்றளிக்கிறது.இரு நடுகற்களும் ஒரே அமைப்பில் உள்ளது. ஒரு நடுகல்கல்வெட்டு "கருவூர்" என்றும் மற்றொரு நடுகல் கரூரின் மற்றொருபெயராய் "வஞ்சி" எனும் பெயர் 8 ம் நூற்றாண்டு வரையிலும் இருந்ததற்கு சான்றாய் அமைகிறது,

வஞ்சிவேள்:

சங்ககாலத்திற்கு பின் வலுகுன்றிய மூவேந்தர்களில் இப்பகுதியை ஆண்ட சேரர்கள், குடிபெயர்ந்து மேற்குகடற்கரை பகுதியான கொடுங்கோளூர் பகுதியில் தம் ஆட்சியை அமைத்துக்கொண்டனர். அதன்பின்னர் புகழ்ச்சோழர் கருவூரை மையமாய் கொண்டு ஆண்டதை பெரியபுராணம் கூறுகிறது. அதன்பின் பாண்டியக்கோவை எனும் பழமையான நூல் வாயிலாய் அரிகேசி பாண்டியன் அதியமான் ஒருவனை புகழியூரில் வென்றதாய் அறிய முடிகிறது. இந்நிகழ்விற்கு பின் இப்பகுதியில் வேளிர் ஒருவரின் ஆட்சி நடைபெற்றதும், அக்காலம் வரையிலும் "வஞ்சி" எனும் தொன்மப்பெயர் வழங்கிவந்தமைக்கும் கரூரில் கிடைத்த இரு நடுகற்கள் சான்றளிக்கிறது.

 மக்கள் இவ்விரு நடுகற்களையும் "கொங்கு வேட்டயர்" என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.

முதல் நடுகல்:

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தள்ளி "மாவடியான் ராமசாமி" எனும் கோவிலின் வளாகத்தில் மேடையமைத்து வணங்கப்படும் நிலையில் உள்ளார், மக்கள் இவரை "கொங்கு வேட்டயர்" என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.

கல்வெட்டு வாசகம்:

"(ர)விகோ கலிய மகந் கருவூரிடை ஆதந்நிரை கொளவெறிந்து பட்டான்"


இக்கல்வெட்டு ஆநிரை கவரும் "வெட்சிப்போரில்" இறந்த கோகலியன் என்பவரின் மகனுக்கு ஏற்படுத்தப்பட்ட நடுகல்லாகும். இப்போர் கருவூர்பகுதியில் நடந்ததாய் கல்வெட்டு கூறுகிறது. இந்நடுகல்லில் பெரிய உருவில் காட்டப்பட்டுள்ளவனே இந்நடுகல்லின் நாயகன் இவர் கீழே ஒருவனின் காலை வெட்டி அவனை மிதித்தவாறும், தலைமேல் வாளினை ஓங்கிபிடித்து வெட்டவரும் நிலையினில் காட்டப்பட்டுள்ளார். மற்றொரு வீரன் இவ்வீரனின் வயிற்றில் வாளை இறக்கியவாரு காட்டியுள்ளனர். கடுமையான பூசல் இங்கு நிகழ்ந்திருக்கக்கூடும்.

இரண்டாம் நடுகல்:

மேற்கண்ட முதல் கல்வெட்டின் அமைப்பிலேயே இக்கல்வெட்டும் அமைந்துள்ளது. ஒரு சிறு மாற்றமாய் இரண்டு வீரர்கள், இந்நடுகல்லின் கதாநாயகனை கண்டு அபயமுறும் நிலையில் காட்டியுள்ளனர். இக்கல்வெட்டும் கரூர் பேருந்துநிலையம் அருகே வ.உ.சி நகர் அருகே அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 


கல்வெட்டு வாசகம்:


"ஸ்ரீ வஞ்சி வேளடியான் நாகன் மகன்" 


என்றுள்ளது. இதற்கடுத்த வரிகள் மிகவும் சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு வாயிலாக கரூர் பகுதியில் வஞ்சிவேள் என்று ஒருவர் ஆண்டதையும், அவரின் அடியானின் மகன் நாகன் என்பவர் பூசலில் இறந்ததையும் அறிய முடிகிறது. 


இதன்பின்னர் 12 ம் நூற்றாண்டு நெடூர் பெருமாள் கோவிலில் "ஸ்ரீ வஞ்சி வைஷ்ணவரோம்" என்ற கல்வெட்டு கிடைக்கிறது.இதன்பின்னர் வஞ்சி எனும் பெயர் வழக்கத்திலிருந்து அழிந்துள்ளது. மாறாக முடிவழங்குசோழபுரம் என அழைக்கப்பட்டு அதன் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலிருந்து கருவூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

புகளூர் தமிழி கல்வெட்டில்" கருஊர்" 

 இரண்டாம் நடுகல் 

முதல் நடுகல் 


Saturday, 25 July 2020

இனாம் குளத்தூர் நினைவுத்தூண்கள்

இனாம் குளத்தூர் நினைவுத்தூண்கள்:

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலின் முன்பு மூன்று தூண்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் தலைப்பகுதி வட்டவடிவில் செதுக்கப்பட்டு, நந்தியுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.மூன்று தூணிலும் உருவம் ஏதும் இல்லை, முதல் தூணில் உறத்தூர் கூற்றத்து கோநாட்டு நம்பி கிழத்தியார் தலையாய நாட்டின கல் என்றுள்ளது. தலைநாழிய நாட்டின கல் என்றால் இறக்க என பொருள். முதல் தூண் ஒரு பெண்ணுக்காய் எழுப்பப்பட்ட நினைவுத்தூண். இரண்டாம் தூண் கேரளாந்தக வளநாட்டு உறையூர் கூற்த்து களப்பூருடையான் என்பவருக்கு எழுப்பப்பட்ட நினைவுத்தூண். மூன்றாம் தூண் உறத்தூர் கூற்றத்து வடகோநாட்டை சேர்ந்தவருக்கு எழுப்பட்டது. கி.பி10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் இவை. இன்று லைப்பகுதி மட்டுமே வெளியே தெரிகிறது. எழுத்துப்பொறிப்புகள் உள்ளே புதைந்து விட்டது.


Friday, 24 July 2020

மல்யுத்தமும் சதியும்

மல்யுத்தமும் சதியும்:

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ளது பெலத்தூரு கிராமம், இராஜராஜன் காலத்திலேயே இப்பகுதி சோழர் வசமானது. கன்னட பகுதி குறுநில மன்னர்கள், சோழர்களின் மேலாண்மையை ஏற்று, அவர்களுக்காய் பலபோர்களில் கலந்து வெற்றியை பெற்று தந்தும், இறந்தும் உள்ளனர். அதேபோன்ற ஒரு குறுநில மன்னன்தான் "நவிலி" நாட்டை ஆண்ட எச்சா என்பவர், இவர் "நுக" நாட்டை ஆண்ட ரவிகா என்பவரின் மகளான தொகப்பை என்பவரை மணமுடித்தார். பெர்வய்யல் எச்சா மிகச்சிறந்த வீரர், மல்யுத்தத்திலே மிகுந்த பயிற்சியுடையவர். ஒருமுறை மல்யுத்தபோட்டியிலே அரசகுமாரன் ஒருவனை வீழ்த்திவிடுகிறார், அந்த அரசகுமாரன் எவர் என தெரியவில்லை, எந்த அரசகுலம் என்ற தகவலும் இல்லை. தவறுதலாய் அந்த அரசகுமாரன் இறந்துவிடுகிறார். உடனே அவருக்கு மரணதண்டனையும் அளிக்கப்பட்டு, கொன்றும் விடுகின்றனர். இதைகேள்விபட்ட, "தொகப்பை" சுற்றத்தார் தடுத்தும் கேளாமல், சதியேற தயாராகிறார். தான் இறக்கும் முன்பு தனது உடைமைகள் அனைத்தும் தானமளித்து தன் கணவன் உடலின் மீது சதியேறி மாண்டு விடுகிறார். இந்த வீர தம்பதியர்களுக்கு எழுப்பப்பட்ட நடுகல்லே இது.

"தமது தேகமதை தீயிற்களித்த தேகப்பை" என்பதே இக்கல்வெட்டின் முக்கிய வாசகம். இரண்டாம் ராஜேந்திரசோழன் கால நடுகல் இது.

புகைப்பட உதவி: John Peter sir


Tuesday, 14 July 2020

வேட்டை கருப்பர்

வேட்டை கருப்பர்:
திருச்சி மாவட்டம் இடமலைப்பட்டிபுதூர் அருகேயுள்ள இரட்டமலையில் உள்ளது இந்நடுகல்சிலை. இந்தகல்வெட்டை முதலில் கண்டறிந்தவர் காணும்போது இந்நடுகல் புதர்மண்டிய இடத்தில் இருந்தது. தற்போது ஒரு இரும்புகொட்டகை அமைக்கப்பட்டு இந்நடுகல் வேட்டைக்கருப்பு என அழைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார். வேட்டைக்கருப்பின் வரலாற்றை பார்ப்போம்.
கல்வெட்டு தகவல்:
இந்நடுகல் இரண்டு அடுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்தொகுதியில் வெட்டரிவாள், மழு, அம்பு, கொடுவாள், கத்தி, குத்தீட்டி என காட்டப்பட்டுள்ளது!
கீழ்தொகுதியில் வீரன் ஒருவன் குதிரையை இழுத்து வரும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். அவன் அருகே பெரிதாக வெட்டரிவாள் காட்டப்பட்டுள்ளது. "பனையூர் வாழ்க்கை" எனும் இடத்தில் (இவ்வூர் பராந்தகன் கால திருச்செந்துறை கல்வெட்டிலும் வருகிறது) கன்றாப்பில் எனும் ஊரைச்சேர்ந்த, "வேட்டன் மதிரை" என்பவர் காவு(உயிர்ப்பலி) கொடுக்கிறார். அதனை காப்பாற்றுவோரின் பாதம் என் தலைமேல் என்கிறார்.என்ன காரணத்தினால் இதைசெய்தார் என குறிப்பில்லை.இதனை "காலமுக்கியங்குழு" என்ற குழுவின் ஆணைக்கிணங்க செயல்படுத்துகின்றனர். அநேகமாய் அவர்கள் பலியிட்டது குதிரையாய் இருக்கலாம். இவ்வாறு குதிரையை பலியிடும் முறை எங்கேயும் இல்லை. எனவே அரிதாய் பலியிட்டதனால் இக்குதிரைக்கு "நினைவுக்கல்" எடுப்பித்திருக்கலாம்.
அன்று குதிரையை காவு கொடுத்த 'வேட்டன் மதிரை' என்று வேட்டைக்கருப்பாக வணங்கப்படுகிறார்.இன்றும் இக்கோவிலில் நிறைய பலிகள் கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. இதுபோன்ற போர்க்கருவிகள் சூழ குதிரையுடன் கூடிய நடுகல் தமிழகத்தில் எங்கும் இல்லை.






Friday, 3 July 2020

சதி கற்கள்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

கணவன் இந்தவுடன் சமூகத்தில் கைம்பெண்ணிற்கு ஏற்படும் கொடுமையை எண்ணியோ அல்லது கணவனின் மேல் இருந்த காதலோ என எதன்பொருட்டோ மனைவியை உடன்கட்டை ஏறுவாள். இது அவளின் விருப்பப்படியோ அல்லது கட்டாயத்தின்படியோ நிகழும் , வேதத்திலும், இதிகாசத்திலும் "சதியேற்றம்" பற்றிய குறிப்புகள் உண்டு.

இதிகாச குறிப்புகள்:
இலங்கை வேந்தன் இராவணனின் தந்தை குஷத்வஜா மாண்டதும் அவர் மனைவி வேதவதி சதியேறினார்,( வால்மீகி ராமாயணம்) கண்ணனின் தந்தை வாசுதேவன் இறந்ததும் அவரது மனைவிகளான தேவகி, பத்ரா, ரோகினி, மதிரா ஆகியோர் சிதையில் விழுந்து மாண்டனர். கிருஷ்ணர் இறந்ததும் அவரது மனைவியரான ருக்மணி, காந்தாரி, சைபியா, ஹேமாவதி, ஜம்பாவதி ஆகியோர் நெருப்பில் விழுந்து மாண்டனர். கந்தபுராணத்தில் சூரபதுமன் போரில் மாண்டதும் அவன் மனைவி பதுமுகோமளை உயிர் விட்டாள்.
இன்னும் பல உதாரணம் உண்டு.

இலக்கிய குறிப்பு:

பாண்டியரின் வடஎல்லை ஒல்லையூர் நாடு. (இன்றைய புதுக்கோட்டையிலுள்ள ஒலியமங்கலம்) அதனை சோழர் கைப்பற்றுகின்றனர்.பூதப்பாண்டியன் அதனை போரிட்டு வென்றான். ஆகவே "ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்" எனும் பெயரினை பெற்றான். இவன் பெயரில் இன்றும் நாஞ்சில் பகுதியில் "பூதப்பாண்டி" எனும் பெயரில் ஊர் உள்ளது. இத்தகைய சிறப்புள்ள இம்மன்னன் ஒருநாள் இறக்கிறான்.

இவனது மனைவி பெருங்கோப்பெண்டு. இவள் அரசியல் மாண்பறிந்தவள். கணவன் இறந்தவுடன் தீப்புக எண்ணுகிறாள். சுற்றத்தார் இவளை விடவில்லை. அரசன் இல்லா குறைநீங்க அரசாள வருமாறு கூற, அக்கூற்றினை ஏற்க மறுக்கிறாள். தீப்புகாவண்ணம் தடுக்கும் சான்றோரை சினத்துடன் உரைக்கிறாள். அதுவே இப்பாடல்.

"பல்சான்றீரே பல்சான்றீரே
செல்கென செல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச்சூழ்ச்சி பல்சான்றீரே
அணில்வரி கொடுங்காய் வாள்போழ் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
...........................
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே"

பொருள்:
சான்றோரே! நீங்கள் தீப்புகாது தடுக்கின்றனர். ஒருவேளை தீப்புகுதல் அரிது என எண்ணுகிறீர்போலும். எனக்கு குளிர்ந்த தாமரைபொய்கையும், ஈமத்தீயும் ஒன்றே! 
(மேலும் இங்கு கைம்பெண்மகளிர் மேற்கொள்ளும் நோண்பினையும் கூறுகிறது! ) 
வெள்ளரிவிதைபோன்ற நல்லமணம் உடைய நெய்யினை கைம்மைமகளிர் உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்.நீர்ச்சோற்றை வேளைக்கீரையுடனே உண்பர். பருக்கைககல் பரப்பப்பட்ட படுக்கையில் பாய்இன்றி உறங்குவர்.
இப்படுக்கைக்கு பிணப்படுக்கையே மேல். என கூறி தீப்புகுந்தாள். இதிகாசம் தவிர்த்து முதன்முதலாக சதியேற்றம் குறித்து வரும் தகவல் இது. மேலும் ஆய்வேளிர் அண்டிரன் இறந்ததும் அவன் மனைவி இறந்ததாய் புறநானூறு கூறுகிறது.

வரலாற்றில் சதியேற்றம்:

ராஜராஜசோழனின் தந்தை சுந்தரசோழன் இறந்ததும் அவரது மனைவி வானவன்மாதேவி உடன்கட்டை ஏறினார். இதனை திருக்கோவிலூர் கல்வெட்டு கூறுகிறது. இராஜேந்திரசோழன் பிரம்மதேசத்தில் இறந்தபோது வன் மனைவிய்ருள் ஒருவரான வீரமாதேவி சதியேறி இறந்தார். மதுரை விஜயராக நாயக்கர், போரில் தோல்வியின் விளிம்பில் இருக்கும் தருவாயில், பகைவர் கையில் தன்மனைவியர் சிக்காமல் இருக்க அனைவரையும் தீயிலிட்டு கொன்றார். தேசிங்குராஜன் கடலியில் இறக்க, அவனது மனைவி சதியேறினார். இவளது தியாகத்தை மெச்சிய நவாப் "இராணிப்பேட்டை" என்ற ஊரையே ஏற்ப்படுத்தினார்.

சதிவழக்கம்:

மார்க்கோபோலோ தனது பயணக்கட்டுரையில் சதிவழக்கம் இந்தியா முழுவதும் அதிகம் இருந்ததென குறிப்பிடுகிறார். சதிவழக்கம் எவ்வாறு இருந்ததென போர்த்துகீசிய பயணி பெஃர்னோவா நூனிஸ் குறிப்பிடுகிறார். சாதாரண ஏழைகுடும்ப பெண்கள் சதியேற விரும்புவதில்லை, ஆனால் சிதையில் அவர்களது உறவினர் பிடித்து தள்ளிவிட்டுவிடுவர். உயர்வகுப்பு பெண்ணாயிருப்பின் சிலசடங்குககள் செய்து அவளாகவே தீயில் விழும்படி ஏற்பாடு செய்வர், மங்கல வாத்யம் முழங்க, முழு ஒப்பனை செய்து, உயர்ந்த விலையுடைய ஆடையை அணிவிப்பர். பின்னர் தெருவில் ஊர்வலமாய் அழைத்து வந்து, சொத்துகளை அப்பொழுதே அவளது பிள்ளைகளுக்கு பங்கிட்டு, அதன்பின் சுடுகாட்டுக்கு அழைத்துவந்து ஒருகுழியில் இறங்கச்செய்து ஆடைகளை உருவி, உடலெங்கும் எண்ணெய் பூசி மொழுகிய பின் உடலைமறைக்க சிறுஆடை அணிவித்து மடிவர் என மற்றொரு வெளிநாட்டு பயணியான பார்போசா தான் கண்டதை கூறுகிறார். சிலபெண்கள் விதியை நொந்து உயிரிடுவர், சிலர் மரணபயம் காரணமாய் பின்வாங்கினால் வழுக்கட்டாயமாய் இழுத்து நெருப்பில் தள்ளுவர். இச்சடங்கினை பிராமணர் ஒழுங்குபடுத்துவர்.

நாயக்கர் ஆட்சியில் ஏகப்பட்ட சதி நடுகற்கள் கிடைக்கின்றன. அதற்கு முன்னால் பல்லவர் காலம் முதல் கிடைத்தாலும் அருகியே கிடைக்கிறது.இன்றும் பல ஊர்களிலுள்ள "தீப்பாய்ந்தம்மன்" வழிபாடு உள்ளது. அவர்கள் இவ்வாறு சதியேறியவர்களே. இக்கொடிய வழக்கம் சட்டவிரோதமானது என்றும் தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதியான ராஜா ராம்மோகன் ராயின் உதவியுடன் வில்லியம் பெண்டிங் பிரபு இதற்கான சட்டத்தை வங்க மாகாணத்தில் கொண்டுவந்தார். பின்னர், 1830 ஆண்டு இச்சட்டம் சென்னை, பம்பாய் மாகாணங்களுக்கும் அமுலாகி ஒழிக்கப்பட்டது.



புலிக்குத்தி நடுகற்கள்

புலிக்குத்தி நடுகற்கள்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இந்தியாவில் தொன்மை வாய்ந்த நடுகற்கள்  பாறைஓவிய பதிவாய் காணப்படுவது விலங்கினங்களுடன் பூசலிட்டு இறந்த வீரனை போற்றுவதாகவே உள்ளது. ஆயிரம்பசுக்களை தானம் செய்யும் புண்ணியம் போரில் மாண்ட ஒரு வீரனுக்கு கிடைக்கும் என ரிக் வேதம் கூட கூறுகிறது. அம்பாரிஷா எனும் மன்னன் ஒருபோரில் கலந்துகொள்வான். அப்போது அவன் சேவகன் சுதேவா அவன் கண்முன்னே மாண்டுபோவான். அவன் அழகிய விமானத்தில் சொர்க்கம் செல்வான். எத்தகு வேள்வியும் செய்யாத அவன் எவ்வாறு சொர்க்கம் சென்றான்? என இந்திரன் அம்பாரிஷா கேட்க நாட்டின் பொருட்டு ஒருவன் இறந்தால் அவன் வீரசுவர்க்கம் புகுவான் என இந்திரன் பதிலளிப்பான். போர் அல்லது பூசலிற்கு ஆயிரம்காரணம் இருக்கலாம். ஆனால் தன்பொருட்டு  சண்டையிடாமல் பிறருக்காய் மாண்டவனே தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறான். இது ஒருவகையில் இவ்வகை வீரர்களை ஊக்கப்படுத்துவதாகவும், மற்றவர்களை இவ்வாறுதயார்படுத்துவதாகவும் அமைகிறது!  நிறைய நடுகற்களில் மாண்ட வீரனை கௌரவப்படுத்த யானையை விட உயர்த்திக் காட்டுவதுண்டு.அதன் காரணம் அவ்வீரன் காட்டிய பெருவீரமே. இதே மான்பு நமது தெய்வச்சிலைகளில் காணலாம். எட்டுக்கைகாளி, பத்துக்கைதெய்வம் போன்றவர்களுக்கு அவ்வாறு வடிக்க காரணம் எதுவென யோசித்தால் ஒருதெய்வம் பலவித ஆயுதத்தை ஒரே நேரத்தில் உபயோககிக்கும் திறன் கொண்டதே என தான்நம்பியதை பிறருக்கு சுட்டவே என்ற காரணம் புலப்படும். இதையே தான் நடுகல்லிலும் வடித்துள்ளனர்.சங்க இலக்கியத்தில் புலிகுத்தி வீரன் குறித்து குறிப்புள்து. கபிலர் இருக்குவேளிரை "புலிக்கடிமால்" என கூறுவது நோக்கத்தக்கது. இலக்கியம் தவிர்த்து பல்லவர்காலத்தில் நமக்கு எழுத்துப்பொறிப்புடன் நடுகல் கிடைத்துள்ளது. முத்தரைய மன்னன் சுவரன் மாறன் கூட புலியைக்குத்தி கொன்று பெருவீரனாய் தனை காட்டிக்கொள்கிறார். அப்புலிக்கு ஒருநடுகல்லையும் தான் கொன்ற இடத்தில் எழுப்புகிறான்.பெரும்பாலும் இவ்வகை நடுகற்கள் குறிஞ்சி, முல்லை பகுதிகளில் கிடைக்கிறது. முல்லைவனமாய் இருந்து பிற்காலத்தில் விவசாயநிலமாக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாய் கொங்கு பகுதிகளில் பிற்கால பாண்டியராட்சியிலிருந்து நாயக்கர் காலம் வரை நடுகல் அதிகம் கிடைக்கிறது. இதனை இன்றைய சமூக சூழலுடன் ஒப்பிடலாம். வனத்தைஒட்டிய குடியிருப்புகளில் இன்று ஆங்காங்கே சிறுத்தை, முதலிய வனவிலங்குகள் தென்படுவதைபோல அன்றும் தென்பட்டிருக்கும் அதன் சான்றே கீழ்க்காணும் நடுகற்கள்.







Tuesday, 30 June 2020

புல்லியார் வம்ச நடுகல்

புல்லியார் வம்ச நடுகல்:

"கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்"

அகநானூற்று பாடலான இப்பாடலில் மாமூலனார் புல்லியைக் கள்வர் கோமான் (கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டை அடக்கி ஆண்டவன் என்றும், வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன் கள்வர் எனும் இனத்தின் கோமான்(அரசன்) என பொருள் கொள்ளலாம். 

புல்லியின் வாழ்க்கைமுறை:

"அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்" 

தலைமை வாய்ந்த யானைகளின் தந்தங்களை,கள்ளோடு விற்று அதனால் கிடைத்த நெல்லை கொண்டு, தன்னை புகழ்ந்துபாடும் அலைகுடிகளான பாணர்க்கு பரிசளித்து மகிழ்வான்.கழலினை தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார் புல்லியை போற்றுகிறார்.

இதுதவிர புல்லியியின் இனத்தை பற்றி 10 பாடல்கள் சங்கஇலக்கியமெங்கும் கிடைக்கிறது. இப்பாடல்களை ஆய்ந்து பார்க்கையில், புல்லிகள் பதினென் வேளிர்குடிகளில் ஒருவராய் இல்லாது, சங்ககாலத்தில் பயின்றுவரும் ஆநிரைக்கள்வர்களில் தனித்துவம் வாய்ந்த ஓர் இனமாய் இருத்தல்கூடும். பெரியபுராணத்தில் கூடகண்ணப்பர் வரலாற்றை சேக்கிழார் கூறுகையில் வேங்கடமலையை ஒட்டிவாழும் பகுதிகளில் ஆநிரைகள்வர்கள் கூட்டமாய் சென்று பசுக்கூட்டங்களை கவர்ந்து, அதனால் செழிப்போடு அவ்வூர் இருந்தது என காட்டியிருப்பார். தொடக்கத்தில் புல்லிஇனம் ஆநிரை கவரும் "கரந்தைபோரில்" மட்டுமே ஈடுபட்ட இவ்வினம். நாளடைவில், தொண்டைமண்டலத்தில் ஆநிரைகாக்கும் குடியாக உயர்கிறது. இதற்கு அக்காலத்தில் ஏற்ப்பட்ட அரசு மாற்றங்களும் காரணமாய் இருந்திருக்கக்கூடும். சங்ககாலத்தில் எவ்வரசக்கூட்டங்களுடனும் சேராது தனித்ததொரு வாழ்வியலை கொண்டிருந்த இவ்வினம், கிட்டத்தட்ட சங்ககாலம் தொடங்கி ஏறத்தாழ 1000 ஆண்டுகள் அவ்வாறே தனித்தவொரு குடியினராய் திகழ்ந்ததற்கு கீழ்க்கண்ட புல்லிநடுகல்லே சான்று. இந்த கள்வர் குலத்திலிருந்து கிளைத்த குடியாய் முத்தரையர் இனம் உருமாற்றமடைந்திருக்கூடும் என்ற ஐயத்தினை செந்தலை, மற்றும் கிள்ளுக்கோட்டை நடுகல் உணர்த்துகிறது. இரண்டாம்நந்திவர்மன் காலத்திலேதான் முத்தரையர் கல்வெட்டு அரசமரபினராய் தஞ்சைபகுதியில் கிடைக்கிறது. அதற்குமுன் தொண்டைமண்டல பகுதி நடுகல்லில் மட்டுமே இவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது. இரண்டாம் நந்திவர்மனின் கடிநகரம் இன்றைய கண்டியூரைசுற்றியுள்ள பகுதிகள். இப்பகுதியில் அவருக்கு ஆதரவான ஒரு குடி முத்தரையர் மட்டுமே! பன்னிரன்டு வயதில் அரியனையேறிய நந்திவர்மன் தாயாதி பிரச்சனையில் கடிநகரம் தோற்றுவித்து அங்கேகுடியேற, அவருக்கு ஆதரவாய் தொண்டைமண்டலத்திலிருந்து தஞ்சைப்பகுதிக்கு முத்தரையர் குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். சித்திரமாய பல்லவராஜனும், பாண்டியனும் நந்திவர்மனை சிறைபடுத்த, திருத்தணியிலிருந்து பெரும்டையொடு உதயேந்திரன் வந்து அவர்களை வென்று நந்திவர்மனை மீட்டான். அப்போரில் முத்தரையரின் பங்கு பெரியதாய் இருந்திருக்கும். இப்போருக்கு பிறகே குவாவன் முத்தரையன் எனும் முத்தரைய மன்னனின் முதல் கல்வெட்டு பொன்விளைந்தபட்டி அருகே கிடைக்கிறது. இதன்பிறகே முத்தரையர் மரபு அரச உருவாக்கம் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. அதன்பின் நிருபதுங்கன் காலம் வரை பல்லவருக்கு கீழிருந்து சிறப்பாய் ஆட்சிபுரிந்தனர். இவர்களில் சிறந்த மன்னனாய் கருதப்படும் சுவரன்மாறன் தன் கல்வெட்டுகளில் "கள்வர் கள்வன்" என கூறிக்கொள்கிறான். எனவே சங்ககாலத்தில் தன்னை "கள்வர் கோமான்" என கூறிக்கொள்ளும் புல்லி மரபு இவர்களாய் இருக்கக்கூடும் என நடனகாசிநாதன் முதலானோர் கூறுகின்றனர்.

கீழே கானும் நடுகல் கல்வெட்டு, ஆநிரைகவரும் குடியாய் இருந்த புல்லிகள் அதன்பின் காவல்காக்கும் குடியாய் மாறி நிரைமீட்டு இறந்த வெட்சிபோர் வீரனை பற்றி கூறுகிறது.

"புல்லியார் கொற்றாடை நிரை
மீட்டுப்பட்ட கல் கோனாரு"


Monday, 29 June 2020

கோழிப்போர் நடுகல்

கோழிப்போர் நடுகல்:

பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும்
காய்ந்தும்வாய்க் கொண்டும் கடுஞ்சேவல் – ஆய்ந்து
நிறக்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்
புறங்கண்டும் தான்வருமே போர்க்கு

புறப்பொருள் வெண்பாமாலையில் சேவற்சண்டை குறித்து வரும்பாடல் இது. பலசண்டையில் கலந்தாலும்(ஈராஸ், மூராஸ்) விடாமல் வெறியுடன் சண்டையிடுதலை மேற்கண்டபாடல் கூறுகிறது. இதில் வரும் 'எறிந்தும்' என்பதற்கு "காலின் முள்ளை இட்டு இடித்தும்" என இப்பாடலின் உரை கூறுகிறது. சமீபகாலம் வரையிலும் சேவலின் காலிடுக்கில் கூரான சிறிய கத்திபோன்ற பொருளைகட்டி சண்டையிட வைப்பர். எத்துணை வருடமாய் இவ்வழக்கம் தொடர்கிறது என இப்பாடல் வாயிலாய் அறியலாம். இன்று நாம் ஆண்கோழியை சேவல் என்று கூறுகிறோம். அன்று சேவல், பெட்டைக்கோழிகளை போதுவாக கோழி என்றே அழைத்தனர். பெண்கோழியை "அளகு" என கூறினர். சேவற்சண்டையிடும் Jockyகளை அன்று வித்தகர் என அழைத்தனர். கோழிசண்டையின் நுட்பங்களை விளக்க "கோழிநூல்" என்ற நூல் இருந்து பிற்பாடு அழிந்துள்ளது. இந்நூலிலிருந்து பல மேற்கொள்கள் பல இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. பொதுவாக சண்டைக்கோழிக்கென்று சில இனங்கள் உண்டு. இவ்வினங்களின் குஞ்சுகளையோ அல்லது முட்டைகளையோ வாங்கி, வீட்டுக்கோழிகளிடம் அடைகாக்கவைத்து அதன்பின் 5 மாதம் வரை கோழிகளோடு பழகவிட்டு பின் தனியே பிரித்து 2 வயதுவரை பயிற்சி கொடுப்பர்.
போட்டி நடக்கும் தேதிக்கு சுமார் மூன்றுமாதம் முன்பே சேவலை தயார்படுத்துகின்றனர். சண்டைசேவலுடன் கூடவே அதே எடையுடைய சில சேவல்களையும் வாங்கி தினமும் மோதவிடுவர். அதன்பின் நீச்சல்பயிற்சி இன்னும் சில பயிற்சிகள் உண்டு. சேவலுக்கு வலுகூட்ட சோளம், பாதாம், அவித்த ஈரல் கொடுப்பதுண்டு. Tournament அறிவித்தவுடன் 21 நாள்கள் கடும்பயிற்சி சேவலுக்கு அளிக்கப்படும்.
அதன்பின் போட்டியில் கலந்துகொள்ளும் சேவலுக்கு 15 நிமிடம் சண்டை 15 நிமிட ஓய்வு என்று நேரம் ஒதுக்கப்படும். ஓய்வுநேரத்தில் அடிபட்டசேவலுக்கு முதலுதவி அளிக்கப்படும். வெதுவெதுப்பான நீரில் சேவலின் உடலின் வழிந்தோடும் ரத்தம் முதலில் கழுவப்படும். அதன்பின் கால், முகம், முள் ஆகியவற்றில் காயத்தின் தன்மை ஆராய்ந்து, இரத்தத்தை வாயால் உறிஞ்சி, ஆழமான காயங்களில் ஊசியால் தையல்போடுவர். இதற்கென பிரத்யேக நூலும் உண்டு.அதன்பின் வெதுவெதுப்பான நீரை சேவலின் வாயில் குடிக்க கொடுத்து, தொண்டையில் இறங்கியதும் அந்நீரை உமிழச்செய்வர்.அப்போது இரத்தம் கலந்த நீர்வெளிவரும். இவ்வாறு பலமுறைகொடுத்தபின். நல்லநீர் கொடுக்கப்படும். ஒருதோசைக்கல்லில் துணியை வைத்து கொஞ்சம் சூடேறியதும் அதத்துணியை வைத்து ஒத்தடம் கொடுக்கப்படும். அதன்பின் க்ளுக்கோஸ் உருண்டை கொடுப்பர். அக்காலத்தில் நாட்டுச்சக்கரையுடன் அறைத்த சுக்கு உருண்டை தரப்பட்டது. அதன்பின் சேலை கொஞ்சம் நடக்கவைத்து Warmup செய்யப்பட்டு பின் அச்சேவல் போட்டியில் கலந்துகொள்ளும்,ஒவ்வொரு வருடமும் தை முதல் சித்திரை மாதம் வரை ஐந்து மாதங்களே சேவல்சண்டை சீசன். 

சண்டைசேவல் வளர்ப்பது கலை மட்டுமின்றி அது கௌரம் சார்ந்த ஒரு நிகழ்வு, ஆகவே சிலர் வறுமையில் இருப்பினும் இச்சேவல்களை சிறப்புடன் கவனித்து வளர்க்கின்றனர். கீழே படத்தில் காணும் நடுகற்கள், இதேபோன்ற கோழிப்போரில் ஈடுபட்டு மரணமடைந்த கோழிகள். இவற்றின் உரிமையாளரான 'கோழிவித்தகர்கள்' தாம் உயிருக்குயிராய் வளர்த்த சேவலை மறக்கவியலாது கல்லெழுப்பி வணங்கினர். இந்நடுகற்கள் 1500 வருடம் பழமையானது.


Sunday, 28 June 2020

நிசீதிகை நடுகல்

நிசீதிகை நடுகல்:

சமணமதத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சல்லேகனை விரதம். உண்ணா நோன்பிருந்து இறக்கும் முறையே சல்லேகனம் எனப்படும்!  இவ்விரதம் மேற்கொள்வோர் முதலில் தம் குருவிடம் உத்தரவு பெற்று, சரியான இடத்தினை தேர்ந்தெடுத்து, தனியாய் மக்கள் நடமாட்டம் இல்லா இடத்தை தேர்ந்தெடுத்து, அவ்விடத்தை தருப்பை புல்லால் பரப்பி, அதன்மேல் வடக்குதிசை நோக்கி விரதம் மேற்கொள்வர், முதலில் திரவஉணவு மட்டும் உட்கொள்வர், அதன்பின் தண்ணீர் மட்டுமே அருந்துவர்.  அதற்கு அடுத்த நிலையில் தண்ணீரும் அருந்தாமல் விரதம் மேற்கொள்வர். தொடக்கத்தில் புல்மேல் நடக்கலாம், அமரலாம், ஆனால் இறுதிநிலையை அடையும்போது கைகாலை அசைக்காமல் இருந்து உயிர் துறப்பர். சல்லேகனை எனும் இச்சொல் பின்னாளில் வந்தது, ஆரம்பத்தில் ஆராதனை, நிசீதி, பஞ்சநமஸ்காரம் என வழங்கப்பட்டது. தமிழிலக்கியத்தில் வரும் "வடக்கிருத்தல்" வழக்கமே சல்லேகனையாக வந்திருக்ககூடும் எனும் கருத்துமுண்டு. சங்ககால கோப்பெருஞ்சோழன் முதல் நாட்டுப்புறநாயகன் பொன்னர் வரை வடக்கிருந்து உயிர்விட்ட சான்று உண்டு.
ஐங்குறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசியில்,  நீலகேசி எனும் சமணப்பெண்மனி, குண்டலகேசி எனும் பௌத்த பெண்மனியிடம் வாதிட்டு வெற்றி பெறுவதாய் அமைந்த ஒரு காப்பியமாகும், இதில் முகமலர்ந்து சாவினை விரும்பியேற்கும் சாவினை "தற்கொலை" என குண்டலகேசி கூறுகிறது, அதனை மறுத்து, உடம்பாகிய சிறையிலிருந்து உயிர் விடுதலையடைய இவ்விரதம்(சல்லேகனை) உதவுகிறதென நீலகேசி கூறுகிறது! இவ்விரதம் இருப்போர் பிறவாநிலையடைவோர் என நீலகேசி கூறுகிறது!

நிசீதிகை கல்:

ஈரோடு வட்டம் விஜயமங்கலம் சந்திரப்ரவர் கோவிலில் ஓர் நிசீதிகை கல் உள்ளது. இது கர்நாடக மாநிலம் சிரவணபெலகோலாவிலுள்ள 19 மீட்டர் உயரமுள்ள கோமதீஸ்வரர் எனும் பாகுபலி சிலையெழுப்பிய சாமுண்டராஜனின் தங்கை புலிஅப்பை என்பவர் நிசீதிகை நோன்பேற்று இறக்கிறார். அவருக்கெழுப்பிய நடுகல்லே இது! சமணமதத்தில் பெண்கள் உயர்வாய் மதிக்கப்பட்டதேயில்லை, பெண்களுக்கு வீடுபேறு கிடையாது! ஆண்கள் சல்லேகனை நோன்பிருந்தால், வீடுபேறு அடைவர், ஆனால் பெண்கள் சல்லேகனையிருந்து, இறந்து அதன்பின் அடுத்தபிறவியில் ஆணாய் பிறந்து அதன்பின் வீடுபேறடைவர் என சமணநூல்கள் கூறுகிறது!


Saturday, 27 June 2020

கொற்றம்பூதி - பூதி வம்ச நடுகல்:

பூதி வம்ச நடுகல்:

பதினெட்டு வேளிர்களில் ஒருவர் இருக்குவேள். வேளிர்கள் துவரை நகரிலிருந்து வந்தவர்கள் என கபிலர் கூறுகிறார். கர்நாடக மாநிலம் துவாரசமுத்திரமே என்பது அறிஞர் கருத்து. ஹொய்சாளர் கூட இருக்குவேள் மரபினரே என்றும் கூறுவர். இவர்கள் மிழலைக்கூற்றம் என்ற பகுதியை ஆண்டதாய் புறநானூறு கூறுகிறது. இவை அறந்தாங்கி, திருமயம் தாலுகா பகுதிகளாய் இன்றுள்ளது.மேலும் "இருங்கோவேண்மான் அருங்கடிபிடவூர்" எனவும் புறநானூறு கூறுகிறது. பிடவூர் என்பது இன்றைய திருச்சி மாவட்ட திருப்பட்டூர் ஆகும். ஆக ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளை இவ்வேளிர்கள் ஆண்டுள்ளனர். இந்த இருக்குவேளிர்களே பிற்காலத்தைய கொடும்பாளூர் சிற்றரசர்களின் முன்னோர். இவர்களின் சிறப்புப்பெயர் பூதி என்பதாகும். இப்பெயர் கேரள மாநிலம் எடக்கல் தமிழி எழுத்துகளில் பயின்று வருகிறது! இத்தகைய பூதிவம்சத்தை சேர்ந்த வீரனொருவன் ஆநிரை மீட்கும் கரந்தைப்போரில் இறந்துவிடுகிறான். அவனுக்கு எழுப்பிய நடுகல்லே இது.

களவு ஒழுக்கம்:

மகாபாரதத்தில் அர்ஜீனனும், சங்க இலக்கியத்தில் மலையமான் திருமுடிக்காரியும் தலைமையேற்று ஆநிரைகளை கவர்ந்து வந்துள்ளனர். தொண்டைமான் காலம் வரையிலும் இவ்வழக்கம் நடந்துள்ளது. மன்னரின் ஆணை பெற்று போர்தொடுத்து ஆநிரை களவுகொள்வது மன்னூறு தொழில் என்றும், தனிப்பட்ட முறையில் களவுகொள்வது தன்னூறு தொழில் எனவும் அழைக்கப்பட்டது. இதில் இரண்டாம் வகையே பெருவழக்காய் இருந்துள்ளது. இவ்வாரு ஆநிரை கவரும்போர் வெட்சிப்போர் ஆகும்,ஆநிரையை கவர்ந்த பின் அக்கள்வர்களை, மீட்க வரும் கரந்தையர்கள் வெல்வது ஆரமர் ஓட்டல் எனப்பட்டது. ஆநிரையை கவர்ந்தவர்கள் சாதாரணமாய் தாம் கவர்ந்த பசுக்களை விட்டுத்தரமாட்டடார்கள். போரிட்டு கரந்தை மறவர்களை கொள்வார்கள். இவர்களை கடலில் மறைந்து மண்ணுலகத்தை மீட்டெடுக்கும் பெருமாளுக்கு இணையாக நச்சினார்க்கினியார் குறிப்பிடுகிறார்.

இதேபோன்ற ஓர் ஆநிரை மீட்கும் கரந்தைபோரில் இருக்குவேள் வம்சத்தை சேர்ந்த "கொற்றம்பூதி" எனும் தலைவன் இறந்துபடுகிறான். அவன் இறந்த இடத்திலேயே நடுகல் எழுப்பியதை கல்வெட்டு கூறுகிறது. இந்நடுகல் குளித்தலை வட்டம் வடசேரியில் உள்ளது. முன்னர் வனமாய் இருந்ததால் இந்நடுகல் இவ்வீரன் இறந்த இடத்திலேயே வைக்கப்பட்டு இருந்தது. தற்போது புறவழிச்சாலை வந்ததால்
இக்கல் அப்புறப்படுத்தப்பட்டு அருகேயுள்ள தொழிற்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.






மகனுக்கு தாய் எடுத்த நடுகல்

மகனுக்கு தாய் எடுத்த நடுகல்:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரவாதி தாலுக்கா வாழைக்குறிச்சி சிவன் கோவில் ஊருணியில் இந்த சிற்பமும் கல்வெட்டும்  உள்ளது. முதல் பலகையில் உள்ள சிற்பம் முன்பக்கம் நடந்து செல்வது போல் அமைந்துள்ளது. கால்கள் உடைந்துள்ளது அதில் எழுத்துக்கள் இல்லை. இரண்டாவது பலகையில் உள்ள கல்லில் இடுப்பிற்குமேல் உடைந்துள்ளது. அதில் கல்வெட்டு பொறிப்புள்ளது. இவ்வெழுத்துக்கள் 9ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது. தமிழ்பேர் அதியரைசன்அடியான் மகன் என்பவர் ஏதோ ஒரு போரில் இறந்து படுகிறார்.  இறந்த மகனுக்கு  அவன் தாயார் எழுப்பிய நடுகல்லே இது. தமிழ்பேரதியரசன் என்பவர் அப்பகுதியில் இருந்த முத்தரைய மன்னராய் கருதப்படுகிறார்! அவரது சேவகரின் மகனே இறந்துபட்ட வீரனாவார். தமிழகத்தில் கிடைத்த சிறப்பான நடுகற்களில் இதுவும் ஒன்று.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

P.c: Mirunalini Natarajan




Friday, 26 June 2020

தூங்குத்தலை நடுகற்கள்

தூங்குத்தலை நடுகற்கள்:

நம் கோவில் திருவிழாக்களில் கிடாவெட்டு நடைபெறுவதை பார்த்திருப்போம். அக்காலத்தில் ஆநிரைகள்(ஆடு ,மாடு) பெருஞ்செல்வமாய் கருதப்பட்டது. ஆகவே அவ்வினங்கள் பெருகவும், நோய்நொடியின்றி இருக்கவும் பட்டியில் இருந்த ஆடு ஒன்றினை சாமிக்கு நேர்ந்துவிட்டு குறிப்பிட்ட நாளில் ஊரார் முன்னிலையில் கிடாவை வெட்டி நேர்த்திக்கடனை செலுத்துவர். இதே வழக்கம் பின்னாளில் தம்குடியினர் கொள்ளைநோயின்றி பல்கிபெருகவோ அல்லது தம்குடித்தலைவன், மன்னன் நோய்நொடியின்றி வாழவோ, படையில் வெற்றி பெறவோ, அல்லது வேறு எதன் பொருட்டோ  தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் மரபு நீண்டநாட்களாய் வழக்கில் இருந்துள்ளது. பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில் அரவானைப் பற்றி குறிப்புள்ளது. இதில் களப்பலி என அறியப்படும் பலி சடங்கைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த பலியை நடத்துபவர்கள் போர்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. இந்த சடங்கில், துணிவுமிக்க ஒரு போர்வீரன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளி தேவிக்கு பலி கொடுத்து கொள்ள வேண்டும். இந்த சடங்கில் தன் உயிரை தியாகம் செய்து கொள்ள அரவான் முன் வந்தார். அரவான் கதை அநேகமாய் தென்னிந்திய சமூகங்களின் பலியிட்டுக்கொள்ளும் மரபினை சேர்ந்த கதையாக பின்னாளில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது! 

 இங்கே காணப்படும் தூங்குதலை என்பது வித்தியாசமான, அல்லது கொடூரமான ஒரு பலி! 
தமிழகத்தில் இதுவரை இத்தகைய நடுகற்கள் 7மட்டுமே கிடைத்துள்ளது. அதில் நான்கு தொண்டை மண்டலத்திலும் ஒன்று தமிழக எல்லைப்பகுதியான கிருஷ்ணகிரியில் கன்னட எழுத்துப் பொறிப்புடனும் மற்றொன்று  விருதுநகர் மாவட்டத்தில் மன்னார்கோட்டை எனும் ஊரில் காளிகோவில் அருகே கல்வெட்டாய் ஒன்று உள்ளது. இதில் வீரனின் புடைப்புச்சிற்பம் ஏதும் இல்லை,குலோத்துங்கசோழன் காலத்தில் கலியுக கண்டடி தன்மசெட்டி எனும் தலைவன் உடல்நலம் பெறவேண்டி வேலன் சீலப்புகழன் என்பவர் பலியிட்டுக்கொள்கிறார். மற்றொன்று சிவகங்கை மாவட்டம் மல்லல் ஊர் அருகேயுள்ளது இதுவும் குலோத்துங்கன் காலமே.இதிலும் புடைப்புச்சிற்பம் இல்லை குலோத்துங்கசோழ மூவரையன் எனும் அதிகாரியின் உடல்நலம் வேண்டி அம்பலக்கூத்தன் எனும் வீரன் தன்தலையை அரிந்து கொடுத்துள்ளான்.இவை அனைத்தும் சோழர் காலமே.

மணிமேகலையும் கலிங்கத்துப்பரணியும்  இச்சாவை மேற்கொள்வோர் எவ்வாறு இறந்தனர் என வருணிக்கிறது.

"உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
உரை
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்"

காடமற்செல்வி எனப்படும் கொற்றவை முன்பு இறைவி நினைத்து வீரன் அமர்ந்திருப்பான். நல்ல தரமான மூங்கிலை மண்ணில் புதைத்து, அதன் மறுமுனையை நல்ல விசையுடன் இழுக்கும் வண்ணம் வளைத்து, அமர்ந்துள்ள வீரனின் கொண்டையில் நன்றாக இருக்கி கட்டிவிடுவர். நன்றாக மூங்கிலை வளைத்திருப்பதால் அது நல்லவிசையுடன் வீரனின் தலையை விடுவிக்க காத்திருக்கும். அவ்வீரன் கொற்றவையை அமர்ந்தவாறு வணங்கி வாளை கழுத்தில் இறக்கியதும், அந்த மூங்கில் தலையை தனியே பிய்த்து எறிந்து உயர்ந்து தூக்கிச்செல்லும். இதனாலேயே இந்த வகை பலிக்கு "தூங்குதலை","தூக்குத்தலை" எனும் பெயர் ஏற்பட்டது.

தமிழகத்தில் அவ்வாறு கிடைத்த வெகுசில சிற்பங்கள் கீழே

புகைப்படங்கள் உதவி:
Vels Kumaran S
Saravanan Raja
Saravana Manian P A
A.t. Mohanதூங்குத்தலை நடுகற்கள்:

நம் கோவில் திருவிழாக்களில் கிடாவெட்டு நடைபெறுவதை பார்த்திருப்போம். அக்காலத்தில் ஆநிரைகள்(ஆடு ,மாடு) பெருஞ்செல்வமாய் கருதப்பட்டது. ஆகவே அவ்வினங்கள் பெருகவும், நோய்நொடியின்றி இருக்கவும் பட்டியில் இருந்த ஆடு ஒன்றினை சாமிக்கு நேர்ந்துவிட்டு குறிப்பிட்ட நாளில் ஊரார் முன்னிலையில் கிடாவை வெட்டி நேர்த்திக்கடனை செலுத்துவர். இதே வழக்கம் பின்னாளில் தம்குடியினர் கொள்ளைநோயின்றி பல்கிபெருகவோ அல்லது தம்குடித்தலைவன், மன்னன் நோய்நொடியின்றி வாழவோ, படையில் வெற்றி பெறவோ, அல்லது வேறு எதன் பொருட்டோ தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் மரபு நீண்டநாட்களாய் வழக்கில் இருந்துள்ளது. பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில் அரவானைப் பற்றி குறிப்புள்ளது. இதில் களப்பலி என அறியப்படும் பலி சடங்கைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த பலியை நடத்துபவர்கள் போர்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. இந்த சடங்கில், துணிவுமிக்க ஒரு போர்வீரன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளி தேவிக்கு பலி கொடுத்து கொள்ள வேண்டும். இந்த சடங்கில் தன் உயிரை தியாகம் செய்து கொள்ள அரவான் முன் வந்தார். அரவான் கதை அநேகமாய் தென்னிந்திய சமூகங்களின் பலியிட்டுக்கொள்ளும் மரபினை சேர்ந்த கதையாக பின்னாளில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது! 

 இங்கே காணப்படும் தூங்குதலை என்பது வித்தியாசமான, அல்லது கொடூரமான ஒரு பலி! 
தமிழகத்தில் இதுவரை இத்தகைய நடுகற்கள் 7மட்டுமே கிடைத்துள்ளது. அதில் நான்கு தொண்டை மண்டலத்திலும் ஒன்று தமிழக எல்லைப்பகுதியான கிருஷ்ணகிரியில் கன்னட எழுத்துப் பொறிப்புடனும் மற்றொன்று விருதுநகர் மாவட்டத்தில் மன்னார்கோட்டை எனும் ஊரில் காளிகோவில் அருகே கல்வெட்டாய் ஒன்று உள்ளது. இதில் வீரனின் புடைப்புச்சிற்பம் ஏதும் இல்லை,குலோத்துங்கசோழன் காலத்தில் கலியுக கண்டடி தன்மசெட்டி எனும் தலைவன் உடல்நலம் பெறவேண்டி வேலன் சீலப்புகழன் என்பவர் பலியிட்டுக்கொள்கிறார். மற்றொன்று சிவகங்கை மாவட்டம் மல்லல் ஊர் அருகேயுள்ளது இதுவும் குலோத்துங்கன் காலமே.இதிலும் புடைப்புச்சிற்பம் இல்லை குலோத்துங்கசோழ மூவரையன் எனும் அதிகாரியின் உடல்நலம் வேண்டி அம்பலக்கூத்தன் எனும் வீரன் தன்தலையை அரிந்து கொடுத்துள்ளான்.இவை அனைத்தும் சோழர் காலமே.

மணிமேகலையும் கலிங்கத்துப்பரணியும் இச்சாவை மேற்கொள்வோர் எவ்வாறு இறந்தனர் என வருணிக்கிறது.

"உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
உரை
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்"

காடமற்செல்வி எனப்படும் கொற்றவை முன்பு இறைவி நினைத்து வீரன் அமர்ந்திருப்பான். நல்ல தரமான மூங்கிலை மண்ணில் புதைத்து, அதன் மறுமுனையை நல்ல விசையுடன் இழுக்கும் வண்ணம் வளைத்து, அமர்ந்துள்ள வீரனின் கொண்டையில் நன்றாக இருக்கி கட்டிவிடுவர். நன்றாக மூங்கிலை வளைத்திருப்பதால் அது நல்லவிசையுடன் வீரனின் தலையை விடுவிக்க காத்திருக்கும். அவ்வீரன் கொற்றவையை அமர்ந்தவாறு வணங்கி வாளை கழுத்தில் இறக்கியதும், அந்த மூங்கில் தலையை தனியே பிய்த்து எறிந்து உயர்ந்து தூக்கிச்செல்லும். இதனாலேயே இந்த வகை பலிக்கு "தூங்குதலை","தூக்குத்தலை" எனும் பெயர் ஏற்பட்டது.

தமிழகத்தில் அவ்வாறு கிடைத்த வெகுசில சிற்பங்கள் கீழே

புகைப்படங்கள் உதவி:
Vels Kumaran S
Saravanan Raja
Saravana Manian P A
A.t. Mohan







முதல் பாண்டியர் நடுகல்

 முதல் பாண்டியர் நடுகல்: தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன கோட்டைப்போர் நடுகற்கள்  இருவகைப்படும், கோட்டைய...