பதினெட்டு வேளிர்களில் ஒருவர் இருக்குவேள். வேளிர்கள் துவரை நகரிலிருந்து வந்தவர்கள் என கபிலர் கூறுகிறார். கர்நாடக மாநிலம் துவாரசமுத்திரமே என்பது அறிஞர் கருத்து. ஹொய்சாளர் கூட இருக்குவேள் மரபினரே என்றும் கூறுவர். இவர்கள் மிழலைக்கூற்றம் என்ற பகுதியை ஆண்டதாய் புறநானூறு கூறுகிறது. இவை அறந்தாங்கி, திருமயம் தாலுகா பகுதிகளாய் இன்றுள்ளது.மேலும் "இருங்கோவேண்மான் அருங்கடிபிடவூர்" எனவும் புறநானூறு கூறுகிறது. பிடவூர் என்பது இன்றைய திருச்சி மாவட்ட திருப்பட்டூர் ஆகும். ஆக ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளை இவ்வேளிர்கள் ஆண்டுள்ளனர். இந்த இருக்குவேளிர்களே பிற்காலத்தைய கொடும்பாளூர் சிற்றரசர்களின் முன்னோர். இவர்களின் சிறப்புப்பெயர் பூதி என்பதாகும். இப்பெயர் கேரள மாநிலம் எடக்கல் தமிழி எழுத்துகளில் பயின்று வருகிறது! இத்தகைய பூதிவம்சத்தை சேர்ந்த வீரனொருவன் ஆநிரை மீட்கும் கரந்தைப்போரில் இறந்துவிடுகிறான். அவனுக்கு எழுப்பிய நடுகல்லே இது.
களவு ஒழுக்கம்:
மகாபாரதத்தில் அர்ஜீனனும், சங்க இலக்கியத்தில் மலையமான் திருமுடிக்காரியும் தலைமையேற்று ஆநிரைகளை கவர்ந்து வந்துள்ளனர். தொண்டைமான் காலம் வரையிலும் இவ்வழக்கம் நடந்துள்ளது. மன்னரின் ஆணை பெற்று போர்தொடுத்து ஆநிரை களவுகொள்வது மன்னூறு தொழில் என்றும், தனிப்பட்ட முறையில் களவுகொள்வது தன்னூறு தொழில் எனவும் அழைக்கப்பட்டது. இதில் இரண்டாம் வகையே பெருவழக்காய் இருந்துள்ளது. இவ்வாரு ஆநிரை கவரும்போர் வெட்சிப்போர் ஆகும்,ஆநிரையை கவர்ந்த பின் அக்கள்வர்களை, மீட்க வரும் கரந்தையர்கள் வெல்வது ஆரமர் ஓட்டல் எனப்பட்டது. ஆநிரையை கவர்ந்தவர்கள் சாதாரணமாய் தாம் கவர்ந்த பசுக்களை விட்டுத்தரமாட்டடார்கள். போரிட்டு கரந்தை மறவர்களை கொள்வார்கள். இவர்களை கடலில் மறைந்து மண்ணுலகத்தை மீட்டெடுக்கும் பெருமாளுக்கு இணையாக நச்சினார்க்கினியார் குறிப்பிடுகிறார்.
இதேபோன்ற ஓர் ஆநிரை மீட்கும் கரந்தைபோரில் இருக்குவேள் வம்சத்தை சேர்ந்த "கொற்றம்பூதி" எனும் தலைவன் இறந்துபடுகிறான். அவன் இறந்த இடத்திலேயே நடுகல் எழுப்பியதை கல்வெட்டு கூறுகிறது. இந்நடுகல் குளித்தலை வட்டம் வடசேரியில் உள்ளது. முன்னர் வனமாய் இருந்ததால் இந்நடுகல் இவ்வீரன் இறந்த இடத்திலேயே வைக்கப்பட்டு இருந்தது. தற்போது புறவழிச்சாலை வந்ததால்
இக்கல் அப்புறப்படுத்தப்பட்டு அருகேயுள்ள தொழிற்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment