Pages

Sunday, 20 September 2020

தூங்குதலை நடுகல்

 தூங்குதலை நடுகல்:


கர்நாடகாவிலுள்ள தூங்குதலை வகை நடுகல், நம் ஊரில் கிடைத்த இவ்வகை நடுகற்கள் யாவும். தன்னைதானே பலியிட்டுக்கொள்ளும் சுயபலிகற்களாகவே கிடைத்துள்ளது. ஆனால் கர்நாடகா மற்றும் அதன் எல்லைபகுதியான, நுளம்பர், கங்கர்கள் ஆண்ட தமிழகத்தின் சில எல்லைப்பகுதிளில், தூங்குதலை பலிஏற்கும் நாயகனை, மற்றொரு ஆள் வெட்டுவது போல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கீழ்க்கண்ட சிற்பம் மூன்று அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. கீழடுக்கில் வீரன் போர்க்களத்தில் கலந்து கொள்வது போல் உள்ளது. அவ்வீரன் போரில் கலந்துகொள்ளும் வீரனாக அல்லது, அவனது படையணி கீழே காட்டப்பட்டுள்ளது!  போரில் தம் அணி வெற்றிபெற, இரண்டாவது அடுக்கில் தம் தலையை கொடுக்க தயாராய் காட்டப்பட்டுள்ளான். அவனது தலை ஒரு மூங்கிலில் கட்டப்பட்டு, பத்மாசனத்தில் அமர்ந்துள்ளின். மற்றொரு வீரன் கொடுவாளில் வெட்ட கையை ஓங்கி வருகிறான். மேலடுக்கில் சிவலோகபதவி அடைந்துள்ளவாறு காட்டப்பட்டுள்ளான். லிங்கத்தின்மேல் சந்திரனும், சூரியனும் காட்டப்பட்டு, இவ்வீரனது இந்த உயிர்க்கொடை சந்திர, சூரியன் இருக்கும்வரை நிலைக்க இக்கல் நடப்பட்டதாய் காட்டப்பட்டுள்ளது!



Wednesday, 9 September 2020

குடியரசு சுவாமி

 குடியரசு சுவாமி:


கரூர் மாவட்டம் பசுபதிபாளையம், அமராவதி ஆற்றங்கரை இறக்கத்தில் குடியரசு சுவாமி என்பவர் வணங்கப்பட்டு வருகிறார். தனியே ஒரு மாடம் சுற்றுச்சுவர் அமைத்து எளிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.அவரின் எதிரே வேல், சூலம் போன்றவை உன்றிவைக்கப்பட்டுள்ளது,  மக்கள் இந்த சூலத்தில் நேர்த்திக்கடன் வேண்டி உயிரோடு கோழியையும், முட்டை, எலுமிச்சைபழம் போன்றவற்றை குத்திவிட்டு செல்கின்றனர். பலியினங்களின் இரத்தம் தரையெங்கும் காணப்படுகிறது! வயதான பூசாரி ஒருவர் மாடத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து, குடியரசு சுவாமிகளிடம் மக்களின் குறைகளை நேரடியாய் நண்பனிடம் பேசுவதுபோல் பரிட்சையமாய் பேசுகிறார்.

இவர்களின் நம்பிக்கையை கொஞ்சம் விலக்கிவிட்டு பார்த்தால், இறந்துபோன வீரர் ஒருவருக்கு எழுப்பப்பட்ட நடுகல் என்பது பார்த்தால் தெளிவாய் தெரிகிறது. 

இவர்களின் இத்தகைய நம்பிக்கையாலேதான் இன்றும் இச்சிலைகள் போற்றி பாதுகாக்கப்படுகிறது. சில இடங்களில் நடுகற்கள் இறையுருவமாய் மாற்றி வணங்கப்படுகிறது!  புலிகுத்தி வீரனை ராமனாகவும், புலியை சிறிது மாற்றி அனுமார் ராமரை கட்டியணைப்பது போலவும் வணங்கப்படுகிறது. அதுவும் வில்லினை கையில் ஏந்திய வீரன் எனில், அவருக்கு நாமமிட்டு பெருமாளாக்கி வழிபாடு நடக்கிறது.


இங்கு நாம் காணும் "குடியரசு சாமிகள்" இத்தகைய பெரிய மாற்றம் காணாமல் சாமியாக்கி விட்டனர் இறந்த அவ்வீரனை. இந்நடுகல்லில் கல்வெட்டு ஏதும் இல்லை, இருப்பினும் தோற்றத்தை வைத்து இவரை 11-12 ம் நூற்றாண்டு கால வீரனாய் கருதமுடிகிறது! நான்கு அடி உயரத்தில் இச்சிற்பம் உள்ளது. கல் ஒழுங்கற்ற முறையில் உள்ளது. பெரும்பாலும் நடுகல் ஒழுங்கான வடிவில் அமைப்பதில்லை, மூலையில் சிறிது உடைத்தவாறே வடிக்கப்படுகிறது. இறந்தவருக்கு எழுப்பப்படுவதாலேயே இவ்வாறு ஏற்படுத்துகின்றனர் என கருதலாம். இடதுகையில் வில்லையும், வலதுகையில் வாளையும், இடையில் குறுவாளையும் காட்டியுள்ளனர். இவ்வீரர் பல ஆயுதங்களை கையாள தெரிந்தவர் எனகாட்ட இவ்வாறு காட்டியுள்ளனர். முன்னோக்கி செல்லும் வலதுகாலில் அம்பு தைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடந்த உள்ளூர் பூசலில் பெரிதாக ஏதோ சாதித்துவிட்டு இவர் இறந்துள்ளார்!முன்னோக்கி சென்ற அவரை பின்னிருந்து அம்பெய்து கொன்றிருப்பதை சிற்பி அழகுற காட்சிப்படுத்தியுள்ளார். 

இறையுருவமாய் இருந்திருந்தால், முத்திரை, ஜடாபாரம், அணிகலன்கள், முப்புரிநூல், ஆசனம் போன்ற ஆகமங்களால் காட்டப்பட்டிருக்கும். இறந்தது வெறும் வீரன் ஆதலால் தமக்கு தெரிந்த முறையில் வீரனை பிரம்மாண்டமாய்காட்சிபடுத்தியுள்ளார் பெயர்தெரியாத அந்த சிற்பி.






Monday, 7 September 2020

வஞ்சிவேள் நடுகல்

 வஞ்சிவேள் நடுகல்:

சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரை கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகிறது. கருவூர் என்றும் வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு நிறைய சான்றுள்ளது. கருவூரும்-வஞ்சியும் ஒன்றே என்பதனை சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு போன்ற சங்கஇலக்கிய பாடல்கள் வாயிவாய் அறியலாம்.

"தன்பொருநை புனல்பாயும்

விண் பொரு புகழ் விறல்வஞ்சி"

இன்று அமராவதி என அழைக்கப்படும் தன்பொருநை ஆற்றங்கரையிலுள்ள வஞ்சியை தலைநகராய் கொண்டு "பெருங்கடுங்கோ" எனும் சேரன் ஆண்டதை புறநானூற்று பாடல் ஒன்று கூறுகிறது. கல்வெட்டுரீதியாய் கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள வேலாயுதம்பாளையம் ஆறுநாட்டார்மலையில் உள்ள கி.பி.இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழி கல்வெட்டு "கருஊர்" என பயின்று வருகிறது. "வஞ்சி" என்னும் பெயருக்கு சான்றாய் கி.பி.8 ம் நூற்றாண்டைச் சேர்ந்தகீழ்க்கண்ட இரு நடுகற்களில் ஒன்றில் "வஞ்சிவேள்" என சான்றளிக்கிறது.இரு நடுகற்களும் ஒரே அமைப்பில் உள்ளது. ஒரு நடுகல்கல்வெட்டு "கருவூர்" என்றும் மற்றொரு நடுகல் கரூரின் மற்றொருபெயராய் "வஞ்சி" எனும் பெயர் 8 ம் நூற்றாண்டு வரையிலும் இருந்ததற்கு சான்றாய் அமைகிறது,

வஞ்சிவேள்:

சங்ககாலத்திற்கு பின் வலுகுன்றிய மூவேந்தர்களில் இப்பகுதியை ஆண்ட சேரர்கள், குடிபெயர்ந்து மேற்குகடற்கரை பகுதியான கொடுங்கோளூர் பகுதியில் தம் ஆட்சியை அமைத்துக்கொண்டனர். அதன்பின்னர் புகழ்ச்சோழர் கருவூரை மையமாய் கொண்டு ஆண்டதை பெரியபுராணம் கூறுகிறது. அதன்பின் பாண்டியக்கோவை எனும் பழமையான நூல் வாயிலாய் அரிகேசி பாண்டியன் அதியமான் ஒருவனை புகழியூரில் வென்றதாய் அறிய முடிகிறது. இந்நிகழ்விற்கு பின் இப்பகுதியில் வேளிர் ஒருவரின் ஆட்சி நடைபெற்றதும், அக்காலம் வரையிலும் "வஞ்சி" எனும் தொன்மப்பெயர் வழங்கிவந்தமைக்கும் கரூரில் கிடைத்த இரு நடுகற்கள் சான்றளிக்கிறது.

 மக்கள் இவ்விரு நடுகற்களையும் "கொங்கு வேட்டயர்" என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.

முதல் நடுகல்:

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தள்ளி "மாவடியான் ராமசாமி" எனும் கோவிலின் வளாகத்தில் மேடையமைத்து வணங்கப்படும் நிலையில் உள்ளார், மக்கள் இவரை "கொங்கு வேட்டயர்" என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.

கல்வெட்டு வாசகம்:

"(ர)விகோ கலிய மகந் கருவூரிடை ஆதந்நிரை கொளவெறிந்து பட்டான்"


இக்கல்வெட்டு ஆநிரை கவரும் "வெட்சிப்போரில்" இறந்த கோகலியன் என்பவரின் மகனுக்கு ஏற்படுத்தப்பட்ட நடுகல்லாகும். இப்போர் கருவூர்பகுதியில் நடந்ததாய் கல்வெட்டு கூறுகிறது. இந்நடுகல்லில் பெரிய உருவில் காட்டப்பட்டுள்ளவனே இந்நடுகல்லின் நாயகன் இவர் கீழே ஒருவனின் காலை வெட்டி அவனை மிதித்தவாறும், தலைமேல் வாளினை ஓங்கிபிடித்து வெட்டவரும் நிலையினில் காட்டப்பட்டுள்ளார். மற்றொரு வீரன் இவ்வீரனின் வயிற்றில் வாளை இறக்கியவாரு காட்டியுள்ளனர். கடுமையான பூசல் இங்கு நிகழ்ந்திருக்கக்கூடும்.

இரண்டாம் நடுகல்:

மேற்கண்ட முதல் கல்வெட்டின் அமைப்பிலேயே இக்கல்வெட்டும் அமைந்துள்ளது. ஒரு சிறு மாற்றமாய் இரண்டு வீரர்கள், இந்நடுகல்லின் கதாநாயகனை கண்டு அபயமுறும் நிலையில் காட்டியுள்ளனர். இக்கல்வெட்டும் கரூர் பேருந்துநிலையம் அருகே வ.உ.சி நகர் அருகே அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 


கல்வெட்டு வாசகம்:


"ஸ்ரீ வஞ்சி வேளடியான் நாகன் மகன்" 


என்றுள்ளது. இதற்கடுத்த வரிகள் மிகவும் சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு வாயிலாக கரூர் பகுதியில் வஞ்சிவேள் என்று ஒருவர் ஆண்டதையும், அவரின் அடியானின் மகன் நாகன் என்பவர் பூசலில் இறந்ததையும் அறிய முடிகிறது. 


இதன்பின்னர் 12 ம் நூற்றாண்டு நெடூர் பெருமாள் கோவிலில் "ஸ்ரீ வஞ்சி வைஷ்ணவரோம்" என்ற கல்வெட்டு கிடைக்கிறது.இதன்பின்னர் வஞ்சி எனும் பெயர் வழக்கத்திலிருந்து அழிந்துள்ளது. மாறாக முடிவழங்குசோழபுரம் என அழைக்கப்பட்டு அதன் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலிருந்து கருவூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

புகளூர் தமிழி கல்வெட்டில்" கருஊர்" 

 இரண்டாம் நடுகல் 

முதல் நடுகல் 


முதல் பாண்டியர் நடுகல்

 முதல் பாண்டியர் நடுகல்: தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன கோட்டைப்போர் நடுகற்கள்  இருவகைப்படும், கோட்டைய...