குடியரசு சுவாமி:
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம், அமராவதி ஆற்றங்கரை இறக்கத்தில் குடியரசு சுவாமி என்பவர் வணங்கப்பட்டு வருகிறார். தனியே ஒரு மாடம் சுற்றுச்சுவர் அமைத்து எளிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.அவரின் எதிரே வேல், சூலம் போன்றவை உன்றிவைக்கப்பட்டுள்ளது, மக்கள் இந்த சூலத்தில் நேர்த்திக்கடன் வேண்டி உயிரோடு கோழியையும், முட்டை, எலுமிச்சைபழம் போன்றவற்றை குத்திவிட்டு செல்கின்றனர். பலியினங்களின் இரத்தம் தரையெங்கும் காணப்படுகிறது! வயதான பூசாரி ஒருவர் மாடத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து, குடியரசு சுவாமிகளிடம் மக்களின் குறைகளை நேரடியாய் நண்பனிடம் பேசுவதுபோல் பரிட்சையமாய் பேசுகிறார்.
இவர்களின் நம்பிக்கையை கொஞ்சம் விலக்கிவிட்டு பார்த்தால், இறந்துபோன வீரர் ஒருவருக்கு எழுப்பப்பட்ட நடுகல் என்பது பார்த்தால் தெளிவாய் தெரிகிறது.
இவர்களின் இத்தகைய நம்பிக்கையாலேதான் இன்றும் இச்சிலைகள் போற்றி பாதுகாக்கப்படுகிறது. சில இடங்களில் நடுகற்கள் இறையுருவமாய் மாற்றி வணங்கப்படுகிறது! புலிகுத்தி வீரனை ராமனாகவும், புலியை சிறிது மாற்றி அனுமார் ராமரை கட்டியணைப்பது போலவும் வணங்கப்படுகிறது. அதுவும் வில்லினை கையில் ஏந்திய வீரன் எனில், அவருக்கு நாமமிட்டு பெருமாளாக்கி வழிபாடு நடக்கிறது.
இங்கு நாம் காணும் "குடியரசு சாமிகள்" இத்தகைய பெரிய மாற்றம் காணாமல் சாமியாக்கி விட்டனர் இறந்த அவ்வீரனை. இந்நடுகல்லில் கல்வெட்டு ஏதும் இல்லை, இருப்பினும் தோற்றத்தை வைத்து இவரை 11-12 ம் நூற்றாண்டு கால வீரனாய் கருதமுடிகிறது! நான்கு அடி உயரத்தில் இச்சிற்பம் உள்ளது. கல் ஒழுங்கற்ற முறையில் உள்ளது. பெரும்பாலும் நடுகல் ஒழுங்கான வடிவில் அமைப்பதில்லை, மூலையில் சிறிது உடைத்தவாறே வடிக்கப்படுகிறது. இறந்தவருக்கு எழுப்பப்படுவதாலேயே இவ்வாறு ஏற்படுத்துகின்றனர் என கருதலாம். இடதுகையில் வில்லையும், வலதுகையில் வாளையும், இடையில் குறுவாளையும் காட்டியுள்ளனர். இவ்வீரர் பல ஆயுதங்களை கையாள தெரிந்தவர் எனகாட்ட இவ்வாறு காட்டியுள்ளனர். முன்னோக்கி செல்லும் வலதுகாலில் அம்பு தைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடந்த உள்ளூர் பூசலில் பெரிதாக ஏதோ சாதித்துவிட்டு இவர் இறந்துள்ளார்!முன்னோக்கி சென்ற அவரை பின்னிருந்து அம்பெய்து கொன்றிருப்பதை சிற்பி அழகுற காட்சிப்படுத்தியுள்ளார்.
இறையுருவமாய் இருந்திருந்தால், முத்திரை, ஜடாபாரம், அணிகலன்கள், முப்புரிநூல், ஆசனம் போன்ற ஆகமங்களால் காட்டப்பட்டிருக்கும். இறந்தது வெறும் வீரன் ஆதலால் தமக்கு தெரிந்த முறையில் வீரனை பிரம்மாண்டமாய்காட்சிபடுத்தியுள்ளார் பெயர்தெரியாத அந்த சிற்பி.




No comments:
Post a Comment