நிசீதிகை நடுகல்:
சமணமதத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சல்லேகனை விரதம். உண்ணா நோன்பிருந்து இறக்கும் முறையே சல்லேகனம் எனப்படும்! இவ்விரதம் மேற்கொள்வோர் முதலில் தம் குருவிடம் உத்தரவு பெற்று, சரியான இடத்தினை தேர்ந்தெடுத்து, தனியாய் மக்கள் நடமாட்டம் இல்லா இடத்தை தேர்ந்தெடுத்து, அவ்விடத்தை தருப்பை புல்லால் பரப்பி, அதன்மேல் வடக்குதிசை நோக்கி விரதம் மேற்கொள்வர், முதலில் திரவஉணவு மட்டும் உட்கொள்வர், அதன்பின் தண்ணீர் மட்டுமே அருந்துவர். அதற்கு அடுத்த நிலையில் தண்ணீரும் அருந்தாமல் விரதம் மேற்கொள்வர். தொடக்கத்தில் புல்மேல் நடக்கலாம், அமரலாம், ஆனால் இறுதிநிலையை அடையும்போது கைகாலை அசைக்காமல் இருந்து உயிர் துறப்பர். சல்லேகனை எனும் இச்சொல் பின்னாளில் வந்தது, ஆரம்பத்தில் ஆராதனை, நிசீதி, பஞ்சநமஸ்காரம் என வழங்கப்பட்டது. தமிழிலக்கியத்தில் வரும் "வடக்கிருத்தல்" வழக்கமே சல்லேகனையாக வந்திருக்ககூடும் எனும் கருத்துமுண்டு. சங்ககால கோப்பெருஞ்சோழன் முதல் நாட்டுப்புறநாயகன் பொன்னர் வரை வடக்கிருந்து உயிர்விட்ட சான்று உண்டு.
ஐங்குறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசியில், நீலகேசி எனும் சமணப்பெண்மனி, குண்டலகேசி எனும் பௌத்த பெண்மனியிடம் வாதிட்டு வெற்றி பெறுவதாய் அமைந்த ஒரு காப்பியமாகும், இதில் முகமலர்ந்து சாவினை விரும்பியேற்கும் சாவினை "தற்கொலை" என குண்டலகேசி கூறுகிறது, அதனை மறுத்து, உடம்பாகிய சிறையிலிருந்து உயிர் விடுதலையடைய இவ்விரதம்(சல்லேகனை) உதவுகிறதென நீலகேசி கூறுகிறது! இவ்விரதம் இருப்போர் பிறவாநிலையடைவோர் என நீலகேசி கூறுகிறது!
நிசீதிகை கல்:
ஈரோடு வட்டம் விஜயமங்கலம் சந்திரப்ரவர் கோவிலில் ஓர் நிசீதிகை கல் உள்ளது. இது கர்நாடக மாநிலம் சிரவணபெலகோலாவிலுள்ள 19 மீட்டர் உயரமுள்ள கோமதீஸ்வரர் எனும் பாகுபலி சிலையெழுப்பிய சாமுண்டராஜனின் தங்கை புலிஅப்பை என்பவர் நிசீதிகை நோன்பேற்று இறக்கிறார். அவருக்கெழுப்பிய நடுகல்லே இது! சமணமதத்தில் பெண்கள் உயர்வாய் மதிக்கப்பட்டதேயில்லை, பெண்களுக்கு வீடுபேறு கிடையாது! ஆண்கள் சல்லேகனை நோன்பிருந்தால், வீடுபேறு அடைவர், ஆனால் பெண்கள் சல்லேகனையிருந்து, இறந்து அதன்பின் அடுத்தபிறவியில் ஆணாய் பிறந்து அதன்பின் வீடுபேறடைவர் என சமணநூல்கள் கூறுகிறது!

No comments:
Post a Comment