Pages

Wednesday, 13 April 2022

முதல் பாண்டியர் நடுகல்

 முதல் பாண்டியர் நடுகல்:


தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன


கோட்டைப்போர் நடுகற்கள்  இருவகைப்படும், கோட்டையை அழிக்கும் முயற்சியில் இறந்த வீரர்களின் நினைவாகவும், கோட்டையை அழியாமல் காப்பாற்றி இறந்த வீரர்களின் நினைவாகவும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளது, இந்த கோட்டை போர்கள் மிகவும் கடினமாக அமையும், பகைவர்கள் தங்களது முழு படைப்பலத்தை பயன்படுத்தி கோட்டைகளை தகர்க்க முயற்சிப்பர், இதனால் பல கோட்டைகள் இவ்வகை போர்களால் அழிந்திருக்கக்கூடும்.


பல்லவர் காலத்தில் 6 ஆம் நூற்றண்டில் கோட்டைப்போர் பற்றிய நடுகல் குறிப்பு கிடைக்கிறது அதேபோன்று  முற்கால பாண்டியர் அரசர் பராந்தகன் நெடுஞ்செழியன்  உடைய ஆட்சிகாலம் கிபி 768-815 ஆகும் 27ஆம் ஆட்சியாண்டில்.


கிபி 795 ஆம் ஆண்டில்  சேரமன்னரின் சேரபடை பாண்டியர்களின் கோட்டையான கரைக்கோட்டையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட .


பாண்டிய படை வீரர்கள் தங்கள் உடைய கரைக்கோட்டை அழியாமல் காப்பாற்ற போர் புரிந்தனர், இந்த போரின்போது, பாண்டியர் அரசர் பராந்தகன் நெடுஞ்செழியன் மீது மிகுந்த அன்பு கொண்ட இரணகீர்த்தி என்ற வீரர் வீர மரணம் அடைகிறார்.


சேரர் படையை சேர்ந்த கொழுவூர் கூற்றத்தை சேர்ந்த பெருமூர் தாதம் பெருந்திணை என்ற வீரர் எய்த அம்பினால் இரணகீர்த்தி  இறக்கிறார்.


இந்த கோட்டைபோரின் போது இரணகீர்த்தி உடன்  மற்றொரு உள் வீட்டு சேவகர் வீரர் ஆன அமர்கழியும் இறந்து விடுகிறார்.


இரணகீர்த்தியும், அமர்கழியும் கோட்டையை அழியாமல் காப்பாற்றி பல சேர படை வீரர்களை வீழ்த்தி உள்ளனர் இந்த மாவீரர் இருவர்.


இந்த கோட்டை போர் ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்தால், பராந்தக நெடுஞ்செழியன் சேரர்களின் சிறந்த துறைமுக பட்டினம நகரம்  ஆன விழிஞம் கோட்டையை முற்றுகையிட்டு வெற்றி காண்கிறார், இந்த வெற்றியை பாண்டியர் சீவரமங்கல செப்பேடு பதிவு செய்கிறது   


“ஆழி முந்நீர் அகல் வானத்து அகடு உறிஞ்சும்


பாழி நீண்மதில் பரந்தோங்கி பகலவனும் அகல ஓடும்


அணி அரணிதாகி மணியிலங்கு மதில் விழிஞம்”


பாண்டியர்களின் விழிஞம் கோட்டை முற்றுகைக்கு பதில் தாக்குதலாக  சேரர்கள் பாண்டியர் வசமிருந்த கரைக்கோட்டை அழிக்க முயன்றுள்ளனர்.


பாண்டிய சேர பேரரசுகள் இடையே நடைபெற்ற மிக முக்கியமான வரலாற்று குறிப்புகளை தாங்கி நிற்கும் இந்த நடுகல் தற்போது கன்னியாகுமரி பத்மனாபபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளது.


ஶ்ரீ கோமாறஞ்சடையற்கு


27ம்மாண்டு சேரமானார்


படை விழுஞத்து புறத்துவிட்டுழக்கக


கரைக்கோட்டை அழிப்பான்


வர பெருமானடிகளுள


ன்பு மிக்குள இரணகீர்த்தியும்


அமர்கழியும் உள்வீட்டினொற்றைச்


சேவகர் கோட்டை அழியாமை


காத்தெறிந்து பலரும் பட்ட


இடத்து இரணகீர்த்தி  


உள்வீட்டுச்சேவகன் கொழுவூர்க்


கூற்றத்துப் பெருமூர்த்தாதம்


பெருந்திளை அத்திரத்தாற்


பலரோடுங்


குத்திப்பட்டான் இருபது கமாளி


Write up : ஸ்ரீநிவாஸ் 


#ஆற்றுப்படை #Aatrupadai #pandya




Wednesday, 2 June 2021

நல்லாத்தூர்_நடுகல்

 #நல்லாத்தூர்_நடுகல்

#நல்லாத்தூர்


அமைப்பு:

இந்நடுகல், 180.5 செ.மீ உயரமும் 81.5 செ.மீ அகலமும் உடையது.

இடது காலை ஊன்றியும் வலது காலைப் பின்னோக்கியும் வைத்த நிலையில் உள்ள  வீரர் ஒருவர்,தம் இடது கையில் வில்லையும் வலது கையில் ஓங்கிய வாளையும் ஏந்தி உள்ளார். அரையாடை அணிந்த இந்த  வீரரின்  இடையில் வாள் உறை காணப்படுகிறது. இவரது இடது மார்பில் அம்பு தைத்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லின் மேற்பகுதியில்   வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது.


இதனை, இப்பகுதியில் பகைவருடனான பூசலில் மார்பில் அம்பு தைத்து மாண்டு போன ஒரு  வீரருக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகக் கொள்ளலாம்.


கல்வெட்டு சிதைந்துள்ளதால் அரசரின் பெயர் ,பூசலின் காரணம், இறந்து பட்ட வீரரின் பெயர் மற்றும் 

ஊர் ஆகியவற்றை அறியக்கூடவில்லை.ஆயினும் நடுகல்லின் அமைப்பு, சிற்ப அமைதி,எழுத்து அமைதி கொண்டு இதனை பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம்.


..............

கல்வெட்டு:


அரசன்:சிம்மவிஷ்ணு/பல்லவர்

காலம்:கி.பி.ஆறாம் நூற்றாண்டு


1.கோவி....

2.ரு பதினாண்காவது மே ல்...ரான் பட

3.எறிந்த ஞான்று பட்டார் கிப்பூர் கொம்...றா..

4.கணங்...

5.ல்.

...........


காலங்காலமாக வீரத்தைப் போற்றிப் பரவிய தமிழ் மரபுச் சங்கிலியின் இற்றுப்போய் அறுந்த  கண்ணிகளின் எச்சமாய் நிற்கிறதுஇந்த நடுகல்.


நன்றி:

Mahathma Selvapandiyan 

Arunkumar Pankaj 

Palani Samy.




Saturday, 29 May 2021

அறம் காத்த முன்னோர்

 அறம் காத்த முன்னோர்:


தன் சக்திக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட, தன்னால் அடக்கி ஆள முடியாத (அ) தனக்கு அச்சத்தை ஏற்படுத்திய இயற்கையை வழிபட்டதில் தொடங்கி படிப்படியாக இனக்குழு சமுதாயமாக வளர்ச்சியடைந்த காலத்தில் தான் சார்ந்த சமூகத்தின் நலனுக்காக போரிட்டு மாண்ட வீரனுக்கும் , தங்கள் இனக்குழு தலைவனுக்கும் குத்துக்கல், கற்த்திட்டை நடுகல் போன்ற நினைவுச்சின்னங்களை எடுத்து வழிபட்டதை சங்க பாடல்களின் மூலம் அறியலாம்... 

 

சங்கப்பாடல்களில் ஈமச்சின்னங்கள் மற்றும் நடுகற்களின் வழிபாட்டு முறைகளை பல விதத்தில் விவரிக்கிறது, அத்தகைய வழிபாட்டு

 முறைகளில் ஒன்றான உயிர்பலி கொடுப்பது பண்பாட்டு நீட்சியாக தமிழரின் வழிபாட்டு மரபில் இன்று வரை தொடர்கிறது. 


உயிர்பலி கொடுப்பதின் மூலம் அவ்வினத்தின் வளமையும் இன விருத்தியும் மேம்படும் என நம்பப்பட்டது. 

நடுகல் நட்டபின் அதற்கு உயிர்பலி கொடுத்து கள் வைத்து படைப்பர். பலியிடப்படும் விலங்கின் இரத்தம் நான்கு புறமும் இறைப்பதன் மூலம் அவ்வுயிரினம் மேலும் பெருகும், ஆட்டு ரத்தத்தினை இறைத்தால் ஆட்டு வளம் பெருகும் என நம்பினர். "கொழுப்பாவறிந்து குருதிப்பலி கொடுத்தால்" (அகம்-309) மாட்டு மந்தை பெருகும் எனவும் நம்பினர். முனைவர் திரு. பூங்குன்றன் ஐயா அவர்கள் இவற்றை வேத யாகங்களுடன் தொடர்பு படுத்தி கூறுவார். 


ஆநிரை கவர்ந்து வரச்சென்ற மழவர்கள் வெற்றியின் களிப்பில் தங்களுடைய தெய்வமான கொற்றவைக்கு கொழுத்த ஆவினை பலியிட்டு படைத்த உணவினை உண்டு மகிழ்ந்தனர் என்பதை பின்வரும் அகநானூற்று பாடல் மூலம் அறியலாம். 


"வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்

பயிர் தழீஇ கடுங்கண் மழவர்

அம்புசேண் படுத்த வண்புலத்து உய்த்தென

தெய்வம் சேர்ந்த பராரை வேம்பின் 

கொழுப்புஆ எறிந்து குறுகிய தூஉய்

புலவுப் புழுக்குஉண்டு வான்கண் அகலறை" (அகம்-309) 


 நடுகல்லை வழிபடும் போது கள்ளோடு, செம்மறி ஆட்டை பலிகொடுத்ததை மற்றோர் அகநானூற்று பாடல் குறிப்பிடுகிறது. 


"நடுகற் பீலி சூட்டி துடிப்பெடுத்துத்

தோப்பிக் கள்ளொடு துரூப்பலி கொடுக்கும்." (அகம்-35) 

 

நடுகல்லுக்கு நீராட்டி நெய் விளக்கேற்றி உயிர் பலியிட்டு வழிபட்டதை கீழுள்ள புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.. 


"இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி

நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய 

மங்குதல் மாப்புகை மறுகுடன் கமழும்." (புறம்-329) 


இப்பாடலில் குறிப்பிட்டுள்ளதை போலவே திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி அருகே உள்ள ஒரு நடு(நினைவு) கல்லுக்கு அப்பகுதி மக்கள் நீராட்டி, மஞ்சள் பூசி, விளக்கேற்றி, உயிர் பலியிட்டு வழிபட்டதை அருகிலிருந்து காணும் பெரும்பேறு பெற்றேன். மிக நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு அவர்கள் அனுமதி மற்றும் உதவியுடனே அந்த நடுகல் கல்வெட்டையும் படியெடுத்து வந்தேன். 


பராந்தக சோழன் காலத்தில் அவ்வூரில் ஏரி வெட்டியதை பற்றி குறிப்பிடுகிறது. 


 கல்வெட்டு தகவல்:

ஸ்வஸ்திஸ்ரீ 

மதிரை கொண்ட கோப்ப

ர கேசரி வம்மகு யாண்டு இருபத்தொன்றா

வது வட்டைத்தலையொக்கல(?)

நிலாகிய பெரும்பாக்கன்னிலக்கண் செட்டி

கட்டுவித்த ஏரி (or ரேரி) தம்மம்..


உள்ளூர மக்களால் கொட்டப்பன் என அழைக்கப்படும் இவர் அம்மக்களின் நம்பிக்கையில் ஏரி பாசன கால்வாய் வெட்டும் தகராறில் இறந்துபோனவர். அங்கிருந்த 50வயது மூத்தவரின் பாட்டன் காலத்திய செவிவழிச் செய்தி இது. ஏரி வெட்டினார் என்பதற்கும் ஏரி பாசன தகராறில் இறந்தார் என்பதற்கும் 1000ஆண்டு கால இடைவெளியில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. வரலாறு கதை வழியாகவே அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்படுகிறது என்பதற்கு இதைவிட பெரிய சாண்றாதரங்கள் தேவையில்லை.... 


வீரதீர செயல்கள் புரிந்து போரில் இறந்தவர்களுக்கு மட்டுமன்றி ஊர் நன்மையின் பொருட்டு உழைத்தவர்களின் நினைவாகவும் நடுகற்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் 1000 ஆண்டுகளை கடந்து இன்றும் அப்பகுதியின் மிகப்பெரிய நீராதாரமாக விளங்கும் ஏரியை வெட்டுவித்தவருக்கு எடுத்த நினைவுக் கல்லும் போற்றுதலுக்குறியதே... 


எழுத்து: சிற்றிங்கூர் ராஜா 

நன்றி : ஸ்ரீநிவாஸ்.








Monday, 21 December 2020

பெண்மானம் காத்த நடுகல்

 பெண்மானம் காத்த நடுகல்:


கூத்தராற்றுப்படையில், வேள் நன்னனிடம் பரிசுபெற்ற ஒருகூத்தன், மற்றொரு கூத்தனுக்கு வழிகூறுகையில், வழியெங்கும் மாமரந்தோறும் நடுகல் இருக்கும், அதனை அடையாளம் கண்டு வா என கூறுவதாய் விளிக்கிறது. அப்பகுதிதான் இன்றைய செங்கம், சங்ககாலத்திலேயே இங்கு நடுகல் நிரம்பியிருந்ததை இதன் வழியாய் அறியலாம்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் உள்ளது ராஜராஜசோழன் காலத்திய நடுகல். ஏரிக்கரையில் நட்டுவைத்த நடுகல், காலப்போக்கில் மண்அரிப்பின் காரணமாய் எடைதாங்காமல் கீழே விழுந்தது. தற்பொழுது அப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் முயற்சிச்சால் மீண்டும் நிமிர்த்தி வைக்கப்பட்டு, இறந்த அவ்வீரனுக்கு மீண்டும் மரியாதை செய்யப்பட்டது.


நடுகல் அமைப்பு:


வீரனின் உருவம் இடதுபுறம் பார்த்தவாறு கையில் வாள், கேடயத்துடன் காட்டப்பட்டுள்ளார். வீரனின் தலைக்குமேல் இருசிறிய உருவங்கள் காட்டப்பட்டுள்ளது! இறந்த வீரன் மேலுலகம் செல்வதுபோல் இது காட்டப்பட்டுள்ளது, இறந்தவன் வீரன்எனில் அவன் மேலுலகம் செல்வான் என்பது பழமையான நம்பிக்கை.வீரனின் காலுக்கருகே குத்துவிளக்கும், கெண்டியும் வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்க்கு நீர் மற்றும் வைத்து விளக்கேற்றி வைக்கும் வழிபாடு இன்றும் தொடர்வதை நாம் இதனோடு ஒப்பீடு செய்யலாம். நடுகல்லின் கீழ்ப்பகுதி நன்றாய் செதுக்கப்பட்டு பூமிப்பகுதியில் நடும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.


நடுகல் விழா:


இப்பகுதி மக்கள் வேடியப்பனாய் வழிபடும் நடுகல்லிற்கு ஆடிப்பெருக்கன்று விழா எடுப்பதை வழக்கமாய் வைத்துள்ளனர். இப்பகுதி நடுகல் பூசாரிக்கு "உளர் பூசாரி" எனப்பெயர். சுருட்டு, மது, கத்தி போன்றவற்றை வேடியப்பனுக்கு படைப்பர். உடுக்கை அடித்து உளர்பூசாரி கீழ்க்கண்டவாறு பாடுவார்,


"காட்டை வளைச்சு வில்லாப் பூட்டி

கானாய் கோபவிடும் செந்தலை வேடுவா

கோ கோ குமரா கொலுவுக்கு அலங்காரா

நீதிவாகனா! நித்திய அவதாரா!

நாராயணா! நரசிம்ம அவதாரா!

அரிக்கும் சிவனுக்கும் உற்பத்தியாய் பிறந்த

அரிமால் புத்திரா! ஐயனாரப்பா!

வேட்டுவலைவா! வேடியப்பா 


என பாட்டுப்பாடி வணங்குர், அச்சமயம் மண்ணால் செய்த சிலையை வைத்து வணங்குவர், நேர்த்திக்கடனுக்காய் ஆடு, மாடுகளை வழங்குவர். அந்த ஆநிரைகளை பட்டியில் அடைக்காமல் சுதந்திரமாய் விட்டுவிடுவர்.


கல்வெட்டு சிறப்புகள்:


ராஜராஜனின் 14ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட இந்நடுகல், "சாலைய் கலமறுத்து அங்குள்ள மலைஆளர் தலையறுத்து" எனும் ஒரு வாக்கியம் அவரது மெய்கீர்த்தியில் இல்லாத தகவலை கூறுகிறது. எனவே இறந்துபோன இவ்வூரன் ராஜராஜனின் கன்னிப்போரான, காந்தளூர்சாலைபோரில் கலந்து கொண்டு "அங்குள்ள மலையாளர்" தலைகொய்த வீரர்களில் இவனும் இருந்திருக்கக்கூடும் என ஒரு கருத்தும் உள்ளது. ஆகவே உரிமையுடன் இவ்வூரார் மட்டும் ராஜராஜனின் மெய்கீர்த்தியில் இந்த "மலைஆளர் தலைஅறுத்து" எனும் வார்த்தையை சேர்த்திருக்கக்கூடும், இதேபோல் குமரிமாவட்ட மணவாளகுறிச்சி பகுதி ராஜராஜனின் மெய்கீர்த்தியில் "கோவில் பள்ளியகம் கொணர்ந்து" எனும் ஒரு வார்த்தை புதிதாக அங்குமட்டுமே கிடைப்பது, இந்த வாதத்திற்கு வலுசேர்க்கிறது. மேலும் இந்நடுகல்லில், 


"கவரை மாயிலெட்டி கம்பன் பெண்டுகள் கூரைகொள்ள எறிஞ்சி பட்டான்" 


மாயிலெட்டி என்பதற்கு அந்தப்புர பெண்களிற்கு வழங்கப்படும் உயரிய சொல் என அகராதிகள் கூறுகிறது. இந்நடுகல்லில் கவரை என்பதற்கு முன்னுள்ள சொற்கள் சிதைந்துள்ளதால் சரியாய் விளக்கம் கொள்ள இயலவில்லை, 

கூரைகொள்ள என்பதிலிருந்து, அந்தப்புர பெண்களின் வீடுகளிலுள்ள கூரைபிரித்து எவரோ தவறாய் நடக்க முயற்சிக்க அந்த கலகத்தில் இவ்வீரன் இறந்துள்ளான் என ஒருவாறு யூகிக்க முடிகிறது.




Wednesday, 28 October 2020

சிலப்பதிகாரம் கூறும் வீரன்

 சிலப்பதிகாரம் கூறும் வீரன்:

இஸ்லாமிய ஜிகாதிகள்,  ஜப்பானிய ஹிரகரகள், விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை இவற்களுக்கெல்லாம் முன்னோடி அக்காலத்தைய நவகண்ட, அரிகண்ட வீரர்கள்.

அடிப்படையில் இவர்கள் அனைவரும் ஒரே உளவியல் எண்ணங்களை கொண்டவர்களே! இப்பலியிடுதலை தொல்காப்பியம் 'அவிபலி' என்கிறது. சிந்துசமவெளியில் கிடைத்த முத்திரைகளில் கூட நரபலி குறித்த செய்திகள் கிடைக்கிறது


"வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென

நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு

உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து

மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி"


( இந்திர விழவூரெடுத்த காதை -சிலப்பதிகாரம் )


"அடிக்கழுத்துடன் சிரத்தை அரிவராலோ

அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ

கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ.."


(கலிங்கத்துப்பரணி)


மேற்கண்ட இருபாடல்களும் வீரன் தன்தலையை அரிந்து கொற்வையின் முன் உள்ள பீடத்தில் வைப்பான் என்கிறது.  எவ்வளவு மனஉறுதி பெற்றவனாய் இருப்பினும் வெட்டுண்ட தன்தலையை பீடத்தில் வைப்பது சாத்தியமா? இல்லையா?  என தெரியவில்லை. ஆனால் ஹம்பியில் உள்ள இந்த சிற்பத்தில் தன் இடக்கையில் தன்தலையை ஏந்தி நிற்கும் வீரன் சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி காட்டும் வீரனை நினைவுறுத்துகிறான்.



Sunday, 20 September 2020

தூங்குதலை நடுகல்

 தூங்குதலை நடுகல்:


கர்நாடகாவிலுள்ள தூங்குதலை வகை நடுகல், நம் ஊரில் கிடைத்த இவ்வகை நடுகற்கள் யாவும். தன்னைதானே பலியிட்டுக்கொள்ளும் சுயபலிகற்களாகவே கிடைத்துள்ளது. ஆனால் கர்நாடகா மற்றும் அதன் எல்லைபகுதியான, நுளம்பர், கங்கர்கள் ஆண்ட தமிழகத்தின் சில எல்லைப்பகுதிளில், தூங்குதலை பலிஏற்கும் நாயகனை, மற்றொரு ஆள் வெட்டுவது போல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கீழ்க்கண்ட சிற்பம் மூன்று அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. கீழடுக்கில் வீரன் போர்க்களத்தில் கலந்து கொள்வது போல் உள்ளது. அவ்வீரன் போரில் கலந்துகொள்ளும் வீரனாக அல்லது, அவனது படையணி கீழே காட்டப்பட்டுள்ளது!  போரில் தம் அணி வெற்றிபெற, இரண்டாவது அடுக்கில் தம் தலையை கொடுக்க தயாராய் காட்டப்பட்டுள்ளான். அவனது தலை ஒரு மூங்கிலில் கட்டப்பட்டு, பத்மாசனத்தில் அமர்ந்துள்ளின். மற்றொரு வீரன் கொடுவாளில் வெட்ட கையை ஓங்கி வருகிறான். மேலடுக்கில் சிவலோகபதவி அடைந்துள்ளவாறு காட்டப்பட்டுள்ளான். லிங்கத்தின்மேல் சந்திரனும், சூரியனும் காட்டப்பட்டு, இவ்வீரனது இந்த உயிர்க்கொடை சந்திர, சூரியன் இருக்கும்வரை நிலைக்க இக்கல் நடப்பட்டதாய் காட்டப்பட்டுள்ளது!



Wednesday, 9 September 2020

குடியரசு சுவாமி

 குடியரசு சுவாமி:


கரூர் மாவட்டம் பசுபதிபாளையம், அமராவதி ஆற்றங்கரை இறக்கத்தில் குடியரசு சுவாமி என்பவர் வணங்கப்பட்டு வருகிறார். தனியே ஒரு மாடம் சுற்றுச்சுவர் அமைத்து எளிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.அவரின் எதிரே வேல், சூலம் போன்றவை உன்றிவைக்கப்பட்டுள்ளது,  மக்கள் இந்த சூலத்தில் நேர்த்திக்கடன் வேண்டி உயிரோடு கோழியையும், முட்டை, எலுமிச்சைபழம் போன்றவற்றை குத்திவிட்டு செல்கின்றனர். பலியினங்களின் இரத்தம் தரையெங்கும் காணப்படுகிறது! வயதான பூசாரி ஒருவர் மாடத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து, குடியரசு சுவாமிகளிடம் மக்களின் குறைகளை நேரடியாய் நண்பனிடம் பேசுவதுபோல் பரிட்சையமாய் பேசுகிறார்.

இவர்களின் நம்பிக்கையை கொஞ்சம் விலக்கிவிட்டு பார்த்தால், இறந்துபோன வீரர் ஒருவருக்கு எழுப்பப்பட்ட நடுகல் என்பது பார்த்தால் தெளிவாய் தெரிகிறது. 

இவர்களின் இத்தகைய நம்பிக்கையாலேதான் இன்றும் இச்சிலைகள் போற்றி பாதுகாக்கப்படுகிறது. சில இடங்களில் நடுகற்கள் இறையுருவமாய் மாற்றி வணங்கப்படுகிறது!  புலிகுத்தி வீரனை ராமனாகவும், புலியை சிறிது மாற்றி அனுமார் ராமரை கட்டியணைப்பது போலவும் வணங்கப்படுகிறது. அதுவும் வில்லினை கையில் ஏந்திய வீரன் எனில், அவருக்கு நாமமிட்டு பெருமாளாக்கி வழிபாடு நடக்கிறது.


இங்கு நாம் காணும் "குடியரசு சாமிகள்" இத்தகைய பெரிய மாற்றம் காணாமல் சாமியாக்கி விட்டனர் இறந்த அவ்வீரனை. இந்நடுகல்லில் கல்வெட்டு ஏதும் இல்லை, இருப்பினும் தோற்றத்தை வைத்து இவரை 11-12 ம் நூற்றாண்டு கால வீரனாய் கருதமுடிகிறது! நான்கு அடி உயரத்தில் இச்சிற்பம் உள்ளது. கல் ஒழுங்கற்ற முறையில் உள்ளது. பெரும்பாலும் நடுகல் ஒழுங்கான வடிவில் அமைப்பதில்லை, மூலையில் சிறிது உடைத்தவாறே வடிக்கப்படுகிறது. இறந்தவருக்கு எழுப்பப்படுவதாலேயே இவ்வாறு ஏற்படுத்துகின்றனர் என கருதலாம். இடதுகையில் வில்லையும், வலதுகையில் வாளையும், இடையில் குறுவாளையும் காட்டியுள்ளனர். இவ்வீரர் பல ஆயுதங்களை கையாள தெரிந்தவர் எனகாட்ட இவ்வாறு காட்டியுள்ளனர். முன்னோக்கி செல்லும் வலதுகாலில் அம்பு தைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடந்த உள்ளூர் பூசலில் பெரிதாக ஏதோ சாதித்துவிட்டு இவர் இறந்துள்ளார்!முன்னோக்கி சென்ற அவரை பின்னிருந்து அம்பெய்து கொன்றிருப்பதை சிற்பி அழகுற காட்சிப்படுத்தியுள்ளார். 

இறையுருவமாய் இருந்திருந்தால், முத்திரை, ஜடாபாரம், அணிகலன்கள், முப்புரிநூல், ஆசனம் போன்ற ஆகமங்களால் காட்டப்பட்டிருக்கும். இறந்தது வெறும் வீரன் ஆதலால் தமக்கு தெரிந்த முறையில் வீரனை பிரம்மாண்டமாய்காட்சிபடுத்தியுள்ளார் பெயர்தெரியாத அந்த சிற்பி.






முதல் பாண்டியர் நடுகல்

 முதல் பாண்டியர் நடுகல்: தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன கோட்டைப்போர் நடுகற்கள்  இருவகைப்படும், கோட்டைய...